கோவை பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவிகளை ஒரு கும்பல் பின் தொடர்ந்தும், மறைவான இடத்தில் இருந்தும் கைபேசியில் படம் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாவதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், செல்போனில் படம் பிடித்த நபர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள், தகாத வார்த்தையால் பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு, மாணவிகளின் பெற்றோர் 4 பேர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் என்றும் அந்த புகாரின் பேரில் ஆனைமலை காவல்துறை 5 பேரை கைது செய்துள்ளனர் என்றும் தெரிகிறது.
முகமது ரீயாசுதீன்( 21), முகமது யூசுப் (21), வசந்தகுமார் (19), கமர்தீன் (19), முகமது சபீர் (19) ஆகிய 5 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தினமும் பள்ளிக்கு செல்லும் அப்பகுதி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து, அந்த படத்தை ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இதையடுத்து, முகமதுசபீர் என்பவரை போக்சோ சட்டத்திலும், மற்ற 4 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் திட்டுதல், சமூக வலைதளங்களில் பரப்புதல் ஆகிய பிரிவிலும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவர்களில் முகமதுசபீரை, கோவை மகிளர் நீதிமன்றத்திலும், மீதமுள்ள 4 பேரை பொள்ளாச்சி ஜேஎம் 1 நீதிமன்றத்திலும் காவல்துறை ஆஜர்படுத்தினர்.
பொள்ளாச்சியில், சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் பலரை ஆபாச வீடியோ எடுத்ததுடன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், தற்போது பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்களால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.