கவர்னர் கிரண்பேடி மீண்டும் வார இறுதி நாட்களில் தற்போது ஆய்வு பணியை தொடங்கியுள்ளார். இதில் ‘பசுமை புதுவை’ என்ற திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு சைக்கிளில் பல கிலோமீட்டர்கள் சென்று ஆய்வு செய்து வருகின்றார்
இந்த நிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பேடி கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அவர் அம்பேத்கர் சாலை, கடலூர் ரோடு வழியாக வேல்ராம்பட்டு ஏரிக்கரைக்கு ( சுமார் 7 கி.மீ ) சென்றார். அப்போது அவருடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பலர் உடன் சென்றனர். அங்கு அவர் ஏரிக்கரையை வலுப்படுத்தும் வகையில் 200 பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
சென்ற மாத இறுதியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பிறந்த நாள் வந்தது. அதனையொட்டி நாராயணசாமி வீட்டுக்கு சைக்கிளில் சென்ற கிரண்பேடி நாராயணசாமிக்கு ‘ஹேப்பி பர்த் டே’ என பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.கவர்னர் கிரண்பேடி ஆர்வமுடன் பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணம் செய்வதைக் கண்டு பாண்டிச்சேரி மக்கள் அஹா..இப்படியும் ஒரு கவர்னர் நமக்கு கிடைத்துள்ளாரே என பெருமை அடைந்துள்ளனர்.