உள்நாட்டில் நிதி மோசடி மற்றும் பொருளாதார குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு பணம் கடத்தல் செய்யும் பணமுதலைகளிடமிருந்து பணத்தை கைப்பற்றும் முயற்சியை மிகப்பெரிய அளவில் மேற்கொண்டவர் நரேந்திர மோடி. அதற்காக உலக நாடுகளிடம் பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டு வந்தார். என்றாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நரேந்திர மோடி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார் என இந்திய ஊடகங்கள் தங்கள் கருத்துக்கணிப்பை கிட்டத்தட்ட ஓரே மாதிரியாக வெளியிட்டன. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருந்த 2 நாட்களுக்கு முன்னால் அதாவது மே- 21 அன்று சுவிஸ் அதிகாரிகள் 11 இந்தியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த நோட்டீஸ் இந்திய அரசாங்கத்திற்கு தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை வெளிப்படுத்தாத 11 இந்தியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுவிஸ் நாட்டு அரசின் அதிகாரபூர்வமான அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சிலரின் பெயர்கள் முழுமையாக பிறந்த தேதியுடன் உள்ளன. பல பெயர்கள் முழுமையாக இல்லை. இன்ஷியல் மட்டும் பிறந்த தேதி மற்றும் காலத்துடன் உள்ளன. அந்த நோட்டீஸ் யார் யாருக்கு அனுப்பப்பட்டது என்கிற விவரங்களை PTI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள்
கிருஷ்ண பகவான் ராம்சந்த் (மே 1949 இல் பிறந்தவர்) மற்றும் கல்பேஷ் ஹர்ஷத் கினார்வலா (செப்டம்பர் 1972 இல் பிறந்தவர்) ஆகிய இரு இந்தியர்களின் பெயர்களை முழுமையாகக் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், அவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
முழு பெயர்கள் இல்லாமல் வெறும் இன்ஷியலுடன் மட்டும் வெளியிடப்பட்ட பெயர்கள்
திருமதி. A S B K (பிறப்பு நவம்பர் 24, 1944), திரு ABKI (பிறப்பு ஜூலை 9, 1944), திருமதி. PAS (நவம்பர் 2, 1983), திருமதி RAS (நவம்பர் 22, 1973 பிறந்தவர்), திரு APS (பிறந்தது நவம்பர் 27, 1944) திருமதி. A D S (பிறப்பு ஆகஸ்ட் 14, 1949), திரு M L A (பிறப்பு மே 20, 1935), திரு N M A (பிப்ரவரி 21, 1968 பிறந்தார்) மற்றும் திரு. M M A (ஜூன் 27, 1973).
இந்த அறிவிப்புகள்படி, இந்த நபர்கள் அல்லது அவர்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் நோட்டீஸ் பெற்ற 30 நாட்களுக்குள், மேல்முறையீட்டை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் இந்தியாவுக்கான ‘நிர்வாக உதவிகள்’ வழங்குவதற்கு ஆதரவான, தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும், இது பரந்த அளவில் வங்கியியல் மற்றும் பிற நிதி விவரங்களை வெளிப்படையாக பகிரும்படி இருக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுவிஸ் அதிகாரிகள் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது. நடப்பு மே மாதம் 7-ம் தேதி சுவிஸ் அதிகாரிகள் இதே போன்ற நோட்டீசை ரத்தன் சிங் சௌத்ரி என்பவருக்கும், மே 14-ஆம் தேதி திரு.ஆர்.பி.என் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளனர். ரத்தன் சிங் சௌத்ரிக்கு பத்து நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், திரு.ஆர்.பி.என்னுக்கு 30 நாட்களில் மேல் முறையீடு செய்யவும் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பையை சார்ந்த ஜியோ டெஸிக் லிமிடெட் மற்றும் அதன் மூன்று இயக்குநர்கள் (பிரசாந்த் ஷரத் முலேகர், பங்கஜ் குமார் ஆங்கர் ஸ்ரீவஸ்தவா மற்றும் கிரான்குல்கர்னி), மேலும் சென்னையை சேர்ந்த ஆதி எண்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் இவர்கள் மீதும் இந்திய அரசால் பல்வேறு நிதி மோசடி, பணம் கடத்தல் தொடர்பாக சுவிஸ் வங்கியிடம் இந்திய அரசு விசாரணை நடத்தியதன் அடிப்படையில் மேற்கண்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வரி செலுத்தாதவர்கள், பல நாடுகளில் நிதி மற்றும் பொருளாதார மோசடியில் ஈடுபவர்கள், பணம் கடத்துபவர்கள் ஆகியோருக்கு சுவிட்சர்லாந்து அரசு பாதுகாப்பாக உள்ளது என்பதை அந்த நாடு மறுத்துள்ளது. சுவிஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் வரி தொடர்பான தவறுகள் பற்றிய சான்றுகளை சமர்ப்பித்த பின்னர், இந்தியா உட்பட பல நாடுகளுடன் கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் அதிகாரிகள் விவரங்களை பகிர்ந்து கொண்டனர்.
தவிர, தானியங்கி தகவல் பரிமாற்றம் என்கிற ஒரு புதிய கட்டமைப்பை இப்போது அந்த நாடு உருவாக்கியுள்ளது. இதன் மூலம், அந்த நாட்டில் பணம் சேர்ப்பவர்களின் விவரங்களை அணுக முடியும். சுவிஸ் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியின் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பதை சுட்டிக் காட்டுவதாக கூறப்படுகிறது.
Content Credits – Rightlog