தமிழகத்தின் ‘ கொள்கையற்ற கூலி பேச்சாளி’ என்று வருணிக்கப்படும் நாஞ்சில் சம்பத் தொடக்கத்தில் வைகோவின் மதிமுகவில் பேச்சாளராக இருந்தார். அங்கு பிரச்சினை ஏற்பட்டு அதிமுகவுக்கு வந்தார்.
ஜெ. மறைந்ததும் சில காலம் சும்மாக இருந்தார். பிறகு தினகரன் அணிக்கு தாவினார். அங்கும் பிரச்சினை ஏற்படவே சில காலம் சும்மாக இருந்த அவர் திமுகவுக்கு தாவியுள்ளார்.
வைகோவின் கதியே அவருடைய சிஷ்யரான இவருக்கும் ஏற்பட்டது. இந்த நிலையில், புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடந்த 27-ந் தேதி புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது நாஞ்சில் சம்பத் புதுவை கவர்னர் கிரண்பேடி குறித்தும், அவர் பாலினம் குறித்தும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து புதுவை மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தேர்தல் ஆணையாளர் கந்தவேலு, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோரிடம் புகார் செய்தனர்.
புகாரில் கவர்னரின் பாலினம் குறித்தும், அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி நாஞ்சில் சம்பத் பேசியதாக கூறி இருந்தார். மேலும் நாஞ்சில் சம்பத் பேசியதற்கான ஆதாரத்தை சி.டி.யாகவும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் புதுவை அரசின் உள்துறை கூடுதல் செயலாளரும், கவர்னரின் சார்பு செயலாளருமான சுந்தரேசன் கவர்னர் கிரண்பேடி குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தாவிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தவளக்குப்பம் போலீசாருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது 294 (ஆபாசமாக திட்டுதல்), 354 ஏ (பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல்), 509 (புகழுக்கு களங்கம் ஏற்படுத்துதல் )ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.