மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று (ஜூலை 2, 2018) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்திற்கு கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, வரும் ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டும் என்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் ஆணையிட்டுள்ளார். அதனால், இன்று நடந்த முதல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தமிழகத்திற்கு சாதகமாக முடிந்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுகூட்டம் வரும் ஜூலை 5 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இதற்கு பின் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த ஆலோசனை கூட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைந்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் பொழுது, அவர் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதை பற்றி விரிவாக கூறினார். ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு ஆகிய விஷயங்களைபற்றி ஆலோசனை மேற்கொண்டதாகஅவர் கூறினார். இதன் பிறகு காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்க வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த ஆலோசனை கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடக்க உள்ளது. அப்பொழுது முதல் ஆலோசனை கூட்டத்தின் உத்தரவு எந்த விதத்தில் செயல் படுத்தப்பட்டுள்ளது என்பதை பற்றி ஆலோசிக்கப்படும்.
இதை பற்றி தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசினார். அப்பொழுது, அவர் இந்த நிகழ்வை சரித்திர நிகழ்வு என்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்துக்கு சாதகமாக செய்தி வந்ததால் நீண்ட நாள் போராட்டத்திற்கு விடிவு கிடைத்துள்ளது என்றும் கூறினார். தமிழகத்திற்கு உச்சநீதிமன்றத்தின் ஆணை படி இந்த வருடத்திற்கான 177.25 டி.எம்.சி தண்ணீர் கண்டிப்பாக வந்து சேரும் என்று கூறினார்.