ஆன்மிகம்செய்திகள்

வீதியில் இறங்கி போராடவில்லை, மீடியா முன்பு அழவில்லை, அரசாங்க நடவடிக்கைக்காக காத்திருக்கவில்லை : ஒரே நாளில் ஸ்ரீ வியாசராஜரின் மூல பிருந்தாவனத்தை புனர் நிர்மாணம் செய்த ஹிந்துக்கள்

கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் துங்கபத்ரை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் நினைத்தாலும், துதித்தாலும் மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும் அற்புத தலமாகும்.

ஸ்ரீ மத்வாச்சார்யரின் குரு பரம்பரையில் உள்ள ஒன்பது மாதவ ஆசார்ய குருமார்களின் சமாதி அமைந்து உள்ள மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்ததுமான ஸ்தலமாக திகழ்கின்றது.

இந்த ஒன்பது சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இந்த இடம் தான் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா. சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ ஜய தீர்த்தர், ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர், ஸ்ரீ வாகீச தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜர், ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர், ஸ்ரீ ராமதீர்த்தர், ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர், ஸ்ரீ கோவிந்த தீர்த்தர் உள்ளிட்ட ஒன்பது த்வைத்த மடாதிபதிகளின் பிருந்தாவனம் இருப்பதால் நவ பிருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சிறப்பு மிகு ஆலயத்தில் 17 ஆம் தேதி நள்ளிரவில் அட்டூழியம் அரங்கேறியது. 18 ஆம் தேதி காலை வழக்கம் போல் பூஜை செய்ய படகில் வந்த பூஜாரிகள் பிருந்தாவனம் இடிக்கப்பட்டதை கண்டு மிக அதிர்ச்சி அடைந்தனர்.

முகலாயர்களின் ஆட்சிகாலத்தில் தென்னகம் அவதியுற்றபோது, ஆஞ்சநேயர் சன்னதிகளை உருவாக்கி மக்களை இன்னல்களில் இருந்து காத்தருளினார்கள். இந்த சன்னதிகள் இன்றளவும் சக்தி கேந்திரங்களாக திகழ்கிறது. சூட்சம சரீரமாகக இருந்து தர்மத்தை காத்துநின்ற இந்த மஹானின் சன்னதி அடியோடு தகர்க்கப்பட்டது ஹிந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்படி ஆகிவிட்டதே என்று இதை பயன்படுத்தி பிரபலமடைய யாரும் வீதியில் இறங்கி போராடவில்லை. மீடியாக்கள் முன்பு வந்து யாரும் அழவில்லை. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று யாரும் காத்துகொண்டு இருக்கவில்லை. சாதூர் மாத சடங்குகளில் பல்வேறு ஊர்களில் இருந்த த்வைத்த சித்தாந்த குருமார்கள் உடனடியாக நவ பிருந்தாவனதிற்கு சென்றனர். ஸ்ரீ ராகவேந்திர மடத்து ஸ்வாமிகள், ஸ்ரீ பேஜாவர மடத்து ஸ்வாமிகள், ஸ்ரீ உத்திராதி மடத்து ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ வ்யாஸராஜ மடத்து ஸ்வாமிகள் நவ பிருந்தாவனத்திற்கு விரைந்தனர். நூற்றுக்கணக்கான மாத்வ பக்தர்கள் படகுகள் மூலம் அந்த சிறிய தீவிற்கு வந்தனர். த்வைத்த குருமார்களின் முன்னிலையில் பிருந்தாவனம் புனர் நிர்மாணம் செய்யும் பணிகள் துவங்கின. இரவு முழுவதும் புனரமைக்கும் பணிகளை பக்தர்களே செய்தனர். மறு நாள் காலையில், பிருந்தாவன கட்டமைப்பு தயாரானவுடன், சாலிக்ராம ஸ்தாபனையை அனைத்து ஸ்வாமிகளும் ஒன்றிணைந்து செய்தனர். பிறகு, மதியம் 3 மணியளவில் பூரணமாக புனர் நிர்மாணம் முடிவடைந்து அப்போதே சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பிருந்தாவனத்தை மீண்டும் போர்க்கால அடிப்படையில் புனரமைக்க உதவிய சேஷகிரி என்பவரின் கட்டிடக்கலை பாராட்டுக்குரியது.

புனர் நிர்மாணம் முழுமையாக முடியும் வரை, அங்கு இருந்த பீடாதிபதிகளோ அல்லது பக்தர்களோ யாரும் நவ பிருந்தாவனத்தை விட்டு வெளியேறவில்லை. அதீத பக்தி, ஆச்சார்யர்களின் சொற்களுக்கு அப்படியே கட்டப்படுவது, ஒன்றாக இணைந்து கைங்கர்யம் செய்து கடினமான செயலை சாத்தியமாக்குவது, ஒரு காரியத்தை முடிக்க தேவைப்படும் முழுமையான ஞானத்தை பெறுவது என்று ஹிந்து தர்மத்தின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்த கர்நாடக ஹிந்துக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

சந்நியாசிகள், ஆச்சார்யார்கள், மடதிபதிகளின் வாக்குகளுக்கு கட்டுப்பட்டு, கடவுள் பக்தியில் நம்பிக்கை வைத்தால் எத்தகைய இன்னல்களையும் விரைவில் வென்று விடலாம் என்பதற்கு சாட்சியே இந்த சம்பவம்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத |

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ச்ருஜாம்யஹம் ||

எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு விளைவிக்கப்படுகிறதோ, எப்போதெல்லாம் அதர்மம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் என்பது பகவான் கிருஷ்ணரின் வாக்கு.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close