செய்திகள்தமிழ் நாடு
Trending

₹40 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது : சாட்டையை சுழற்றும் மத்திய அரசு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரையும், பொது மேலாளரையும் சென்னை புறநகர் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் துறை கைது செய்துள்ளது. விரிவான விசாரணை மற்றும்  சோதனைகளுக்குப் பிறகு, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த அயல்நாட்டவர் ஆவர். இவர்கள், நேற்று கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களுக்கான நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜூலை 2-ஆம் தேதி வரை இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்கள்.

இந்த நிறுவனமானது தான் விநியோகித்த உற்பத்திப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை வாங்குவோரிடமிருந்து வசூலித்தது, ஆனால், அந்த வரித் தொகையை கடந்த 2017 ஜூலை மாதம் முதல் அரசுக்கு செலுத்தவில்லை. இப்படி செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை ரூ.40 கோடியாகும். 20 மாதங்களுக்கும் மேலாக இந்த நிறுவனம், வரி தொடர்பான படிவங்களையும் அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. வரி செலுத்த வேண்டியுள்ளது என்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், பலமுறை அழைப்பாணை (சம்மன்கள்) அனுப்பியும், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், பிற அலுவலர்களும் விசாரணை அலுவலர்களுடன் ஒத்துழைக்கத் தவறிவிட்டனர். தொடர்புடைய நபர்களை தொடர்ச்சியாக கண்காணித்த பிறகு, அவர்களது இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், பொது மேலாளரும், வாங்குபவர்களிடமிருந்து  வரி வசூல் செய்ததையும், அதை அரசுக்கு செலுத்தத் தவறியதையும் ஒப்புக்கொண்டனர். ஜி.எஸ்.டி. துறையினர் சேகரித்த சான்றுகளின்படி, இவர்கள் இருவரும், எல்லைப்பகுதியை கடந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல உத்தேசித்திருந்ததாக தெரியவந்ததால், சட்டப்படி அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு செய்பவர்களை ஜி.எஸ்.டி. துறை தொடர்ந்து கண்காணித்து அழைப்பாணை அனுப்பி வருகிறது. பலர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.  ஜி.எஸ்.டி. துறையினரிடமிருந்து அழைப்பாணை கிடைக்கப்பெற்றும், போதுமான  ஒத்துழைப்பு அளிக்காமல் பலர் இழுத்தடிக்கின்றனர். அழைப்பாணைக்கு உரிய காலத்தில் பதில் அளிக்காவிட்டால், சட்டப்படி ஆறு மாத சிறைத்தண்டனை கிடைக்கும் என்று ஜி.எஸ்.டி. துறை எச்சரித்துள்ளது.

ஜி.எஸ்.டி. தொடர்பாக சந்தேகம் இருந்தால், சென்னை அண்ணா நகரில் உள்ள இத்துறையின் தலைமையகத்தை வரி செலுத்துவோரும், நுகர்வோரும், தொலைபேசி (எண்கள் : 26142850 – 53) வாயிலாகவோ, Sevakendra-outer-tn@gov.in  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம் என்று சென்னை புறநகர் ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறை ஆணையர் திரு.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Inputs from Press Information Bureau

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close