இந்தியா

இந்து மதத்தின் பெருமை இப்பவாது தெரியுதா.? நோபல் விருதை அள்ளிய ‘விரதம்’ – மறைக்கப்பட்ட தகவல்கள்.!

உடல் நலம் பேணுவதற்கு குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பது அவசியமாக இருக்கிறது. நீங்கள் தகுந்த உடல்நலத்துடன் இருப்பது உங்கள் ஆன்மீக சாதனைகளுக்கும் கூட அவசியமாக உள்ளது. ஆன்மீகத்திற்காக மட்டும் என்பதில்லை, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நலமாக இருப்பதற்குக்காக கூட, உடல்நலம் பேணுவது அவசியமாக இருக்கிறது. உடல் செல்கள் தம்மை தாமே அழித்து கொள்வது பற்றிய ஆட்டோபேஜி என்ற ஆய்வு மேற்கொண்டதற்காக யோஷினேரி ஓஷிமி என்ற ஜப்பான் பேராசிரியருக்கு 2016ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையே நாம் மேற்கொள்ளும் விரதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோபேஜி என்று அழைக்கப்படும் செல்களின் அடிப்படைச் செயல்பாடுகளின் ஒரு முக்கியமான அம்சத்தை கண்டுபிடித்தார் யோஷினேரி ஓஷிமி இந்த கண்டுபிடிப்பிற்காகவே அவருக்கு மருத்துவதுறைக்கான நோபல் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உள்ள செல்கள் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் முறை குறித்து கடந்த 2014ல் புத்தகம் ஒன்றினை எழுதினார். அதில், ஆட்டோபேஜி முறை குறித்த விரிவான விளக்கங்கள் மற்றும் அந்த துறை ஆய்வு குறித்த வரலாற்றினையும் அவர் பதிவு செய்திருந்தார். விரதம் இருந்தால் உடம்புக்கு நல்லது என்று நாம் சொல்லி வந்ததை, ஆய்வின் மூலம் நிரூபித்த அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

உணவின் இடைவெளி:

உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும் அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். இது மிக முக்கியம். யோகாவில், 8 மணி நேர இடைவெளி கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் 5 மணி நேர இடைவெளி ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தேவை. ஏனெனில்,வயிறு காலியாக இருக்கும்போது உங்கள் ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.

இதை ஒரு பரிசோதனை மூலமாக பார்க்க முடியும். ஒரு நாளைக்கு சாப்பிடும் உணவை இரண்டாகப் பிரித்து இரு வேளைகளில் சாப்பிட்டு வாருங்கள். சில நாட்கள் கழித்து அதே அளவு உணவை பத்தாகப் பிரித்து 10 வேளைகளில் சாப்பிடுங்கள். 10 வேளைகள் சாப்பிடும்போது உங்கள் உடலில் எடை கூடியிருக்கும். 10 வேளை சாப்பிடும்போது எப்போதும் வயிறு நிறைந்திருப்பதால்.உங்கள் ஜீரண சக்தி சரியாக செயல்படாது. எனவே, உங்கள் உடலை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய கழிவுப்பொருள், வெளியேறாமல் அப்படியே உங்கள் உடலிலேயே தங்கியிருக்கும். வயிறு காலியாக இருக்கும்போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எனவே, ஏற்கனவே சாப்பிட்டது ஜீரணமாகும்வரை காத்திருந்து பிறகு அடுத்த வேளைச் உணவைச் சாப்பிட வேண்டும்.
பழ ஆகாரம் உண்ணும்போது வயிற்றில் அதிக பளு இல்லாததால், வயிற்றிலுள்ள பழைய கழிவை வெளித்தள்ளுவதற்கு உடலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தப் புரிதலில்தான் விரதம் வலியுறுத்தப்படுகிறது. விலங்குகள் கூட இதை தெரிந்து வைத்திருக்கின்றன. சில நாட்களில் அவை உணவருந்தாது. குழந்தைகளும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அறிவுள்ள பெரியவர்கள் இந்த விழிப்புணர்வை இழந்துவிட்டார்கள். சில நாட்களில் குழந்தைகள் உணவை மறுப்பார்கள். ஆனால் பெற்றோர் ஒழுக்கம் என்ற பெயரால் அவர்களை அடித்துச்சாப்பிட வைப்பார்கள்.

மாதம் ஒரு முறையாவது ஒரு நாள் முழுக்க விரதம் இருங்கள்:

இதற்காகத்தான் ஏகாதசி போன்ற நாட்களை வைத்திருந்தார்கள். மாதாமாதம் உங்களுக்கு உகந்த ஏதோ ஒரு நாளில்,நீங்கள் விரதம் இருக்கலாம். அன்று எதையும் சாப்பிட வேண்டாம். அப்படி முழு விரதம் இருக்க முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் பழ ஆகாரத்தில் இருக்கலாம். கவனிக்கவும் பழ ஆகாரம், பல ஆகாரம் அல்ல. பழ ஆகாரம் உண்ணும்போது வயிற்றில் அதிக பளு இல்லாததால், வயிற்றிலுள்ள பழைய கழிவை வெளித்தள்ளுவதற்கு உடலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

உணவுக்கு நீங்கள் அடிமையாக இருப்பதாக உணர்ந்தால் ஒருவேளை உணவைத் துறந்திடுங்கள். இது உங்கள் உடலைக் கொடுமைப்படுத்துவதற்கு அல்ல. உடலின் கொடுமையிலிருந்து விடுதலை பெற. குறைந்தது மாதம் ஒரு நாளாவது பழ ஆகாரத்தில் இருப்பது ஒவ்வொருவருக்கும் நல்லது.

இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:

 1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.
 2. தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
 3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
 4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
 5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.
 6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
 12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
 17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
 18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.
 21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.
 22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.
 23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.
 24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.
 25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.
 26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
 27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.

ஆதாரம்:

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close