செய்திகள்தமிழ் நாடு
Trending

கிடப்பில் கிடக்கும் சென்னை திருமுடிவாக்கம் பாலம் சீரமைக்கும் பணிகள் : பொதுமக்கள் அவதி

திருநீர்மலையில், அடையாற்றின் மேல், இரு வழிப்பாலம் ஒன்று உள்ளது. பம்மல், அனகாபுத்துார், தாம்பரம் பகுதிகளில் இருந்து, குன்றத்துார் செல்லும் வாகனங்கள், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள், இதன் வழியாக சென்று வருகின்றன. அதிக போக்குவரத்து கொண்ட இந்த பாலம், பாதுகாப்பில்லாத நிலையில் இருந்தது என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து எழுந்த புகார்களை அடுத்து, அந்த பாலத்தை சரி செய்யும் பணி துவங்கியது.

இதனால் பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கியது. ஆனால், சில நாட்களிலேயே பாலம் புதுப்பிக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மூன்று மாதங்கள் ஆகியும், பாலம் புதுப்பிக்கும் பணிகள் மீண்டும் துவங்கப்படாமல் இருப்பதால், அந்த சாலையில் போக்குவரத்திற்கு மிக பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது. பாலம் சீரமைக்கும் பணிகளின் காரணமாக, பாலம் மூடப்பட்டதால், அடையாற்றின் குறுக்கே மக்கள் வாகனங்களை ஓட்டி செல்ல துவங்கினர். நாளடைவில் இதுவே தற்காலிக சாலையாக மாறியது. பாலம் சீரமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், மக்கள் உருவாக்கிய தற்காலிக சாலை தான் தற்போது நிரந்தர சாலையாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியே பயணிக்கும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது குறித்து முத்து என்ற வாலிபர் கதிர் செய்திகளிடம் கூறுகையில், “நான் மைலாப்பூரில் இருந்து திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைக்கு தினமும் இந்த சாலை வழியாக தான் இரு சக்கர வாகனத்தில் வந்து செல்கிறேன். பாலம் சீரமைக்கும் பணியால் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. பகல் நேரங்களிலாவது வெளிச்சம் இருக்கும். இரவு பணி முடுத்துவிட்டு திரும்பும் சமயத்தில் வெளிச்சம் இருக்காது. தெரு விளக்குகள் எதுவும் இங்கு கிடையாது. எனவே, இரவில் வீடு திரும்பும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. தமிழக அரசு இதில் தலையிட்டு, விரைவில் பாலம் சீரமைக்கும் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு வழி வகை செய்ய வேண்டும்”, என்று கூறினார்.

பம்மல் பகுதியை சேர்ந்த ரூபன் என்பவர் கூறும் போது, “சென்ற முறை வெள்ளம் வந்த போது, பாலத்திற்கு மேலே ஆற்றுத் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. மீண்டும் இந்த ஆண்டு மழை பெய்ய துவங்கினால், தற்காலிக சாலை சேறும் சகதியாக மாறிவிடும். தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகணங்களுக்கும், பணிக்கு செல்லும் பணியாளர்களுக்கு மிக பெரிய இடையூறாக இருக்கும்”, என்று கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாக இது குறித்து எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக அரசு பாலம் சீரமைக்கும் பணிகளை மீண்டும் துவக்கி, விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் வர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close