அரசியல்செய்திகள்

கட்சியிலும், ஆட்சியிலும் இளைய தலைமுறையினர் அதிகரிப்பு! பா.ஜ.க-வுக்கு அரசியல் விமர்சகர்கள் பாராட்டு!!

பா.ஜ.க,வில் அனுபவம் மிக்க வயது முதிர்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர், எனினும், கட்சி மற்றும் அரசின் முக்கிய பதவிகளில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு வருவதை அரசியல் விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

தேர்தலில், ‘சீட்’ தருவது, அமைச்சரவையில் இடம் அளிப்பது போன்ற விஷயங்களிலும், வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் வயதில் இளையவர் தான். தற்போது செயல் தலைவராக, 58 வயது ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமித்ஷாவின் பதவிக்காலம், வரும் ஜனவரியில் முடிந்த பின், கட்சியின் தேசிய தலைவராக நட்டா நியமிக்கப்பட உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, லோக்சபா சபாநாயகர் பதவிக்கும், இளம் தலைவரை தேர்வு செய்துள்ளது பா.ஜ.க,தலைமை. வழக்கமாக, சபாநாயகர் என்றால், பல முறை எம்.பி.,யாக தேர்வு பெற்றவர், வயது முதிர்ந்தவர், பழுத்த அரசியல்வாதி என்ற, பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. இதற்கு முன், சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜனுக்கு, 76 வயதாகிறது. இதனால், அவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தற்போதைய லோக்சபாவின் சபாநாயகர் வேட்பாளராக பா.ஜ.க,சார்பில், ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இவருக்கு வயது 56 மட்டுமே. இரண்டாவது முறையாக தான் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ல் தான், முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்வானார். அவரை விட வயதிலும், அனுபவத்திலும் ஜாம்பவான்கள் பலர் இருக்க, பிர்லாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பாலைவனப்பகுதிகள் அதிகம் கொண்ட கோட்டா லோக்சபா தொகுதியில் இருந்து ஓம் பிர்லா வெற்றி பெற்றுள்ளார். இவரது தேர்வுக்கு, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட அதிருப்தி தெரிவிக்கவில்லை. 

பா.ஜ.க வில் ஏற்பட்டுள்ள தலைமுறை மாற்றம் தான், ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்ய காரணம். பல புதுமுகங்கள், இளம் எம்.பி.,க்கள் மத்தியில் அமைச்சராகியுள்ளனர். இது கட்சியிலும், ஆட்சியிலும் புது ரத்தம் பாய்ச்ச உதவும்’ என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close