இந்தியா

மம்தாவின் கொட்டத்தை அடக்க வருகிறதா ஆளுநர் ஆட்சி.? மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் அரங்கேற்றும் வெறியாட்டம்.!

மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில், அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 2 தினங்களுக்கு முன்பு இரவு நிகழ்ந்த வன்முறையில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளதால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆத்திரத்தில் பல வன்முறை வெறியாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதனிடையே, தொடரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநில அரசுக்கு கடிதம் எழுதியது. அதில், மேற்குவங்கத்தில் தேர்தலுக்குப்பின்பும் வன்முறை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. இது மாநிலத்தில் சட்ட ஒழுங்கு தோல்வி அடைந்துள்ளதை காட்டுவதாக உள்ளது. சட்டம் ஒழுங்கு விதிமுறைகளை மாநில அரசு பின்பற்றி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்’’ என கூறியிருந்தது.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, மாநில நிலவரம் குறித்து இருவரிடமும் எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் ஊடகங்களில் வெளியானதை போல மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவது குறித்து பேசவில்லை. இந்த சந்திப்புக்குப் பிறகு திரிபாதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடியையும் அமைச்சர் அமித் ஷாவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். மேலும் மாநில நிலவரம் குறித்து இருவரிடமும் எடுத்துக் கூறினேன்” என்றார்.

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியிருப்பது குறித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு, “அதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், இது தொடர்பாக எதுவும் ஆலோசிக்கவில்லை” என பதில் அளித்தார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்ஜியாவும் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மேற்கு வங்க அரசானது துப்பாக்கிகளாலும் தோட்டாக்களாலும் நடத்தப்பட்டு வருகிறது. இதே நிலைமை நீடித்தால் மேற்கு வங்க விவகாரத்தில் மத்திய அரசு தலையிட நேரிடும். தேவைப்பட்டால் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆட்சி கலைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என கூறியிருந்தார்.

அரசியலமைப்பு விதி 356ன் படி ஓர் மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் சரியாக இயங்கவியலா நிலை இருக்கும்போது மத்திய அரசு மாநில அரசை நீக்கி குடியரசுத் தலைவராட்சியை அமைத்திட அதிகாரம் வழங்குகிறது. ஒரு மாநில ஆட்சியானது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அம்சங்களின் அடிப்படையில் செயல்படாத அல்லது செயல்பட இயலாத நிலையில் உள்ளதாக ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் தெரியவந்தாலோ 356-வது சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத்தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் பிரகடனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தாவின் வெறி:

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுவிட்ட நிலையில், ஒடுங்கிப் போய்விட்ட எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி பாஜகவுக்கு எதிராக புதிய போராட்டத்தை முன்னெடுக்க திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புதிய வியூகம் தீட்டி இருக்கிறார். அவரின் அசைக்க முடியாத மாநிலமாகக் கருதப்பட்ட மேற்கு வங்காளத்தில் கூட பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைச் சாதித்து இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்குப் பதில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண் டும் என்றும் அதற்காக எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என்று முழங்கி வருகிறார். ஏற்கனவே தேர்தலின் போதே வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து வன்முறையை தூண்டிய சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் தான் நடந்தது.

அதுபோக தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் எதிர்கேள்வி கேட்பவர்களை கூட காவல் துறையை ஏவி விட்டு கைது செய்து வருகிறார் மம்தா பானர்ஜி. சட்ட ஒழுங்கும் சீர்குலைந்து விட்டது, மத்தியில் இருந்து வரும் உத்தரவுகளையும் பின்பற்றுவது இல்லை. இதனால் அரசு இயந்திரம் செயலிழந்துவிட்டதற்காக இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 356யை மேற்கு வங்கத்தில் அமல்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close