செய்திகள்

அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளி மகள் நீட் தேர்வில் சாதனை! புத்தகங்களை இரவல் வாங்கி படித்து 605 மதிப்பெண் எடுத்து அசத்தினார்!!

நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகள் ஜீவிதா 605 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 

சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். தையல் தொழிலாளி. இவரது மகள் ஜீவிதா. அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இவர், கடந்த 2015 – ஆம் ஆண்டு, 10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதேபோல், பிளஸ் – 2 தேர்வில் 1,161 மதிப்பெண்கள் பெற்றார்.

மருத்துவராக விரும்பிய ஜீவிதா, பிளஸ் – 2 படிக்கும்போதே நீட் தேர்வுக்கும் தன்னை தயார் படுத்திக்கொண்டார். இதற்காக சில மாதங்கள் டியூஷனுக்கு சென்றார். வறுமையின் காரணமாக தொடர்ந்து பீஸ் கட்டமுடியாததால், டியூசன் போகாமல் வீட்டில் இருந்தபடியே தனது சொந்த முயற்சியில் நீட் தேர்வுக்கு படித்தார். நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து படித்தார். அதேபோல்  நண்பர்களிடம் இருந்தும் புத்தகத்தை இரவல் வாங்கிப் படித்து நீட் தேர்வு எழுதினார்.

ஜீவிதா, நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். இவர், அகில இந்திய அளவில் 6,678 -வது இடத்தையும், ஓபிசி பிரிவில் 2,318 – வது இடத்தையும் பிடித்துள்ளார். 

நீட் தேர்வில் வெற்றிவாகை சூடிய மாணவி ஜீவிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: – 

நான் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். எங்கள் அப்பா ஒரு தையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தில்தான் என்னை படிக்க வைத்தார். ஏழையாக இருப்பதால், டாக்டர் ஆக முடியுமா என்று ஏங்கினேன். என் அப்பா, அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். இதனால் நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். 

இப்போது நான் டாக்டர் ஆகும் வாய்ப்பை பெற்றுள்ளேன். ஆனால் அதற்கான செலவுகளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அரசு பள்ளியில் படித்த என்னாலும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளும் முயன்றால் நீட் தேர்வில் சாதிக்கமுடியும் என்பதற்கு நானே உதாரணம். நீட் தேர்வால் முதல் முறை அதிக மதிப்பெண் பெற முடியாவிட்டாலும் மறுபடியும் தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜீவிதாவுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும் வாய்புள்ளது. இதனிடையே நீட்தேர்வில் ஜீவிதா வெற்றி பெற்றாலும் கட்டணம் செலுத்த என்ன செய்வது என குடும்பம் தவித்து வருகிறது.

நன்றி : இந்து தமிழ்

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close