2019 தேர்தல்

மேற்கு வங்கத்தில் மோடி சுனாமி அடித்தது எப்படி? அந்த 3 ரகசியம் இதுதான்!

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் செயல்திறனால் பெற்ற மாபெரும் வெற்றி, மிகுந்த நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களையும் ஆச்சரியத்தால் திணற அடித்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 2014-ல் 42 தொகுதிகளில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க தற்போது 18 இடங்களில் வென்றது தான். 22 இடங்களை மட்டுமே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பெற்று ஒரு படு சூடான தோல்வியை அந்த கட்சி அடைந்தது.  நரேந்திர மோடி அலை விஸ்வரூபமெடுத்து அது எவ்வாறு மம்தாவின் கோட்டைக்குள் புகுந்தது? ஏற்கனவே கிழக்கிந்தியப் பகுதிகளில் கம்யூனிஸ்டுகளின் கூடாரங்களை உடைத்து நொறுக்கி வெற்றி கண்ட பா.ஜ.க-வின் வெற்றி அனுபவங்கள் மம்தாவின் கோட்டையை கைப்பற்ற எவ்வாறு உதவின என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

இந்த காவிப்படைகளின் எழுச்சிக்கு பின்னால் மூன்று பரந்த காரணங்களும் உள்ளன. ஒன்று, இடதுசாரி கட்சிகளின் வாக்குகள் ஏற்கனவே வீழ்ச்சியடைந்து இருந்தன. இதனால்  எதிர்க்கட்சி வாக்குகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் பா.ஜ.க-வுக்கான ஆதரவு முழுமையடைந்தது. இரண்டு, மம்தாவின் இராஜதந்திர தவறுகள். மூன்றாவது பிரதமர் மோடி அலையின் ஈர்ப்பு, இந்த 3 புள்ளிகளைக் கொண்டு விரிவாக காணலாம்.

1.இடது சாரி வாக்கு வங்கி வீழ்ச்சி:

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் 2014-ஆம் ஆண்டில் 34 இடங்களில் வெற்றி பெற்ற மம்தா கட்சி அப்போது 39 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. 2019-ஆம் ஆண்டில் தற்போது 22 இடங்கள் பெற்ற நிலையில் அந்த கட்சி 43.3 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது தனது வாக்குசதவீதம் உயர்ந்தும் அந்த கட்சி 5 ஆண்டுகளில் 12 இடங்களை இழந்ததும் மட்டுமல்லாமல்  2014-ல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.கவை 18 இடங்கள் பெறும்படியாக எவ்வாறு செய்துவிட்டது என்பது ஆச்சரியமான கேள்வியாகும்.

இதற்கான பதில், பா.ஜ.க தனக்கான வாக்கு பகிர்வை பரவலாக எவ்வாறு அடைந்தது என்பதில் அடங்கியுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போது 40.1% சதவீத வாக்குகளைப் பெற்று 18 தொகுதிகளை அடைந்துள்ளது. இந்த வாக்குகள் பா.ஜ.க-வுக்கு எங்கிருந்து வந்தது? இதற்கான பதில், இடதுசாரிகளின் ஒட்டு மொத்த மொத்த வாக்கு சரிவில் உள்ளது. இது பா.ஜ.க-வுக்கு ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இது மக்களவைத் தேர்தலில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாகும்.

2014-ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி 30 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது அதன் வாக்கு வங்கி 7.5 சதவிகிதமாக குறைந்து விட்டது. பா.ஜ.க-வுக்கு கிடைத்த அதிகப்படியான வாக்குகள் இந்த வாக்குகள்தான். மொத்த இடதுசாரிகளின் வாக்குகளும் வலதுசாரியை நோக்கி கிட்டத்தட்ட முழு அளவில் வீசப்பட்டது என்று கூறலாம்.

இதை பார்க்கும் போது கடந்த 34 ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து ஆட்சி செய்த இடதுசாரிகள் தங்கள் கட்சியின் சித்தாந்த ரீதியில் ஒரு வாக்கு வங்கியை உருவாக்கி வைத்திருக்கவில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான், பா.ஜ.க-வின் வாக்கு வங்கி கிடுகிடு என உயர்ந்து 5 ஆண்டுகளில் ஒரு குறுகிய கால கட்டத்தில் கிட்டத்தட்ட முற்றிலுமாக கம்யூனிஸ்டு வாக்கு வங்கியை வீழ்த்தியுள்ளது.

பா.ஜ.க தற்போது வெற்றிக் களிப்பில் இருந்தாலும் தாங்கள் அங்கு காணும் படிப்படியான வெற்றியை சிந்தாந்த ரீதியான வாக்கு வங்கியாக வைத்திருக்காவிட்டால் கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட கதியே தங்களுக்கும் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.   

2.மம்தாவின் ராஜதந்திரதந்திர தோல்விகள்:

மேற்கு வங்கத்தில் கட்சியின் நுழைவு என்பதை பா.ஜ.க. எப்போதும் ஒரு தனது சித்தாந்த செயல்திட்டத்தின் இரு பகுதியாகவே கருதி வந்தது. ஆனால் ஒட்டுமொத்த மாநில அரசியல் சூழ்நிலைகள் இடதுசாரிகளை மையமாக வைத்தே சுழன்று கொண்டிருந்தது. இதனால் குறிப்பிட்ட எல்லையை தாண்ட முடியாத நிலையில் இருந்தது. என்றாலும், பா.ஜ.க-வின் முன்னோடி அரசியல் இயக்கமான ஜன சங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்கள் பிறந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் தனது கட்சியை கொண்டு செல்வதை பா.ஜ.க ஒரு கவுரவ பிரச்சினையாக மனதில் கொண்டு, ராஜதந்திர ரீதியாக சில உபாயங்களை மேற்கொண்டது.

இதன் விளைவாக 2014-ல் இருந்து இடதுசாரிகளின் அழிவும், பா.ஜ.க-வின் எழுச்சியும் ஒரே சமயத்தில் தொடங்கின. மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கொல்கத்தாவிலும் மற்றும் அதை சுற்றியுள்ள 24 பர்கானாக்களிலும் செல்வாக்கை கொண்டுள்ள அதே நேரத்தில் காவிப்படைகளின் ஸ்ரீராம் கோஷத்தின் தாக்கம் இன்னும் அங்கு ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் வடக்கு வங்கத்தில் உள்ள 6 தொகுதிகளையும் பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. மேலும் வடமேற்குப் பகுதியில் உள்ள 24 பர்கானாக்களில் உள்ள விவசாய மற்றும் பழங்குடிப் பகுதிகளில் அழுத்தமாக கால் ஊன்றியுள்ளது. மேலும் மம்தாவுக்கு விசுவாசமாக இங்குள்ள தலித் வாழும் பகுதிகள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்த அகதிகள் பகுதியிலும் பா.ஜ.க திருணாமுல் காங்கிரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

குறிப்பாக இங்குள்ள பாங்கோன் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சாந்தானு தாகூர் போட்டியிட்டார். மடுவா சாதியினர் இந்த தொகுதியில் 65 சதவீத ஓட்டு வங்கியை வைத்துள்ளது. இந்த இனத்தை சேர்ந்த மம்தாவின் அரசில் கனரக துறை அமைச்சராக இருக்கும் மமதா தாக்கரைத் பா.ஜ.க வேட்பாளர் சாந்தானு தாகூர் எளிதாக தோற்கடித்தார். News 18 தொலைகாட்சியில் மமதா தாக்குர் கூறுகையில் “முழு இடதுசாரி வாக்குகளும் பா.ஜ.க-வுக்கு சென்றதால் தான் தோற்றுவிட்டதாகவும், சாந்தனு தன்னை 96,000 வாக்குகளில் தோற்கடித்தார்” என்றும் கூறினார்.

“பா.ஜ.க-வின் புவியியல் மற்றும் கருத்தியல் எழுச்சிக்குப் பிந்தைய இரண்டாவது காரணம், 2011-ல் இடதுசாரிகளை தோற்கடித்து புதிதாக ஆட்சி அமைத்த மம்தா குறுகிய காலத்தில் இடதுசாரிகளை முழுவதுமாக ஒழித்துக் கட்ட விரும்பி மூர்கத்தனமான நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. இடதுசாரிகளும் தங்கள் முகத்தை காட்டாமல் குண்டர்களையும், நக்சல்களையும் ஏவி மம்தாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தினர். மம்தாவின் பதிலடி நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. மக்களுக்கு இடதுசாரிகளின் மீதும், மம்தா மீதும் ஒரே நேரத்தில் வெறுப்பு ஏற்பட்டது.

மேலும் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த பவர் ப்ரோக்கர்கள் மற்றும் பலமானவர்கள் மம்தா கட்சிக்கு ஒட்டுமொத்தமாக மாறிவிட்டனர். இதனால் சிவப்பு நிறம் ஒரு பச்சை நிறமாக மாறியது என்று கூறலாம். இது அதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரே வழி என்று மம்தா நினைத்திருந்தாலும், எதிர்க்கட்சியே இல்லாமல் ஒரு வெற்றிடம் உருவாகி இருப்பதை அவர்  உணரவில்லை. இந்த வெற்றிடம் பாஜகவுக்கு ஒரு வலுவான அடிப்படையை தந்துவிட்டது எனலாம்.

மம்தா மற்றொரு பிழை செய்தார். 34 ஆண்டு ஆட்சியில் இடது சாரிகளுக்கு விசுவாசமாக இருந்த முஸ்லீம் வாக்குகளை தனக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் அவர்களுக்கு ஏராளமான அரசு சலுகைகளை அள்ளி வீசினார். வங்க தேசத்திலிருந்து வெளியேறிவரும் முஸ்லிம் அகதிகளை கண்டும் காணாமல் விட்டுவிட்டார். அவர்களுக்கு எதையும் சரிவர பார்க்காமல் குடியுரிமை பெற வழிவகை செய்தார். இதனால் அந்த பகுதிகளில் வசித்து வரும் மற்ற சமூக மக்களின் கோபத்துக்கு உள்ளானார். இந்த நிலையில் ஏற்கனவே தங்களை அழித்து வரும் மம்தா கட்சினர் மீது கடும் கோபத்திலிருந்த கம்யூனிஸ்டுகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், மம்தாவை ஓரம் கட்டவும் இந்த பகுதிகளில் வகுப்புவாத அரசியலை ஊக்குவித்தனர். பா.ஜ.க-வின் வெற்றிக்கு மறைமுகமாக பாடுபட்டனர். மேலும் பா.ஜ.க தனது மண்ணின் மைந்தர் கொள்கையை தூக்கிப் பிடிக்க இந்த சூழ்நிலைகள் உதவின.

மேலும் துர்கா பூஜை தொடக்க காலம் குறித்தும், சரஸ்வதி பூஜை குறித்தும் மம்தா சர்ச்சையை உருவாக்கியது மற்றும் பள்ளி நூல்களில் உருது பாடங்களை திணித்தது போன்றவை இந்துக்களின் குரலாக பா.ஜ.க-வை மாற்றியது. இது இந்து மக்களின் மத்தியில் பா.ஜ.க-வை எழுச்சியுற செய்தது.

ஆனால் தான் செய்த தவறுகளை உணர்ந்து மம்தா சுதாரிப்பதற்குள் பா.ஜ.க தனது கால்களை மிகவும் அழுத்தமாக ஊன்றிக்கொண்டது.

3. மோடி அலையின் தாக்கம்

மூன்றாவது புள்ளி நிச்சயமாக, பிரதமர் மோடியின் வெற்றிகரமான 5 ஆண்டு நிறைவும், அவருடைய பழுதாகாத பக்கா இமேஜும் பெங்காலிகளுக்கு பா.ஜ.க-வின் மீது காதல் கொள்ள செய்தது. இத்தனைக்கும் பா.ஜ.க-வுக்கு அங்கு அமைப்பு ரீதியான வலு இல்லை. மேலும் மம்தாவுக்கு இணையான பிரபலமான மாநில தலைவர் இல்லை என்றாலும் கூட நடுத்தர பெங்காலி மக்களுக்கும், குறிப்பாக கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் பகுதிகளைத் தாண்டி மோடியால் பா.ஜ.க-வுக்கு ஒரு வலுவான ஆதரவைத் தந்தது. பிரதமர் மோடிக்கு மேற்கு வங்கத்தின் மீதிருந்த தணியாத அன்பும், பாசமும் கூட காரணங்களாகும்.

நரேந்திர மோடி மாநிலத்தில் 15 பேரணிகள் நடத்தியது – ஒரு பெரிய எண்ணிக்கையாகும் – மற்றும் அனைத்து பேரணிகளும் பெருமளவில் இயற்கையாக திரண்டவை, பேரணிகள் பிரம்மாண்ட ஆதரவைக் கண்டன.

அந்த பேரணிகளுக்கு மாநில நிர்வாகம் பலவகை தடைகளை ஏற்படுத்தினாலும் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்களின் மீதுள்ள ஈர்ப்பால் கடைசியில் வெற்றியை கண்டன. மக்கள் மத்தியில்  தாமரை சின்னமும் தேசிய தலைவர்களுமே கண்ணுக்கு தெரிந்தனர். இதனால் உள்ளூர் பா.ஜ.க கட்சிக்காரர்கள் குறித்து மக்களுக்கு தெரியாமல் போனாலும், தொகுதி எம்.பி வேட்பாளர் யார் என்பது குறித்து கூட அவர்களுக்கு தெரியாமல் போனாலும் தங்களை காக்கப் போவது தாமரைதான் என அவர்கள் உறுதியாக நம்பி அந்த சின்னத்தில் வாக்களித்தனர்.

மேலும் பிரச்சாரத்தின் போது மம்தா மோடியின் மீது தன் கோபத்தை கக்கினார். அவரை குறிவைத்தே பெருமளவில் எதிர்த்து பிரச்சாரம் செய்தார். எல்லை மீறி மோடியை தனிப்பட்ட முறையில் கூட தாக்கி பேசினார். இதனால் மம்தா எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவே திரும்பின.  

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போகும் பா.ஜ.க. மம்தாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். பா.ஜ.க அங்கு வெற்றியின் விளிம்பை நெருங்கும் தகுதியுடன் பார்க்கப்படுவதால் கடுமையான வன்முறைகள் அவிழ்த்துவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனை எந்தவித இழப்பும் இல்லாமல் பார்த்து பா.ஜ.க ஆழ்ந்து, தீவிரமாக செயல்பட வேண்டும். 

Post translated from Firstpost article.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close