இந்தியா

எதிர் கட்சிகள் எப்படி வியூகம் அமைத்தாலும் தப்ப முடியாது – பாஜக தலைமையில் இன்று கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி..!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்களுடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்றிரவு விருந்து மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.

17-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள வேலூர் தவிர 542 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு 150 இடங்களுக்கும் குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்றிரவு டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் விருந்தளிக்கிறார்.

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்ரே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதேபோன்று சிரோன்மனி அகாலிதளம், பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி, தமாகா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்தும், தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் கூட்டணிக் கட்சியினருடன் அமித்ஷா விவாதிக்க உள்ளார்.

தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களும் அமைக்கப்படும் என தெரிகிறது.

கூட்டணி கட்சியினருடனான விருந்துக்கு முன்னதாக பாஜக மூத்த தலைவர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக அல்லாத ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா ஆலோசனை நடத்துவது  முக்கியத்துவம் பெற்றுள்ளது

Tags
Show More
Back to top button
Close
Close