இந்தியா

பிரதமர் மோடி ஆட்சியில் அபாரம்..! 70 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூல் – காங்கிரஸ் போட்ட ஓட்டைகளை அடைக்கும் பா.ஜ.க ஆட்சி..!

கடந்த நிதியாண்டில், இதர சட்ட நடவடிக்கைகள் மூலம் வசூலிக்கப்பட்டதை விட, திவால் சட்டத்தின் கீழ், வாராக் கடன், இரு மடங்கு வசூலாகியுள்ளது.

திவால் சட்ட நடவடிக்கைகளுக்கு அஞ்சி, பல தொழிலதிபர்கள், கடனை திரும்பச் செலுத்துவதும், கடன் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவதும் அதிகரித்துள்ளது. இதனால், வங்கிகளின் வாராக் கடன் வசூல் அதிகரித்துள்ளது. இது குறித்து, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த, 2018 -19ம் நிதியாண்டில், திவால் சட்டத்தின் கீழ், 70 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. இது, பிற சட்ட நடவடிக்கைகள் மூலம் வசூலானதை விட, இரு மடங்கு அதிகம்.

கடந்த நிதியாண்டில், கடன் மீட்பு தீர்ப்பாயம், ‘சர்பாசி’ சட்டம், இ.எஸ்.ஐ.ஏ., சட்டம், லோக் அதாலத் ஆகியவற்றின் மூலம் மேற்கொண்ட நடவடிக்கையில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, வாராக் கடன் வசூலாகியுள்ளது. இதே காலத்தில், திவால் சட்டம் மூலம், 94 வழக்குகளில் தீர்வு விகிதம், 43 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, பிற சட்ட நடைமுறைகளில், 26.5 சதவீதமாக உள்ளது. திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு முன், 4,452 வழக்குகளில், 2.02 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, திவால் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

புதிதாக வாராக் கடன் உருவாவது குறைந்தது:

இதன் காரணமாக, வங்கி துறையில், புதிதாக வாராக் கடன் உருவாவது குறைந்துள்ளது. இந்த வகையில், கடந்த நிதியாண்டில், வங்கி துறையின் மொத்த வாராக் கடன், 10 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2017 – -18ம் நிதியாண்டில், 11.5 சதவீதமாக இருந்தது. திவால் சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தின் மீதான வாராக் கடனுக்கு, 270 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். ஆனால், இந்த, ‘கெடு’வுக்குள் தீர்வு காண முடிவதில்லை. ஒரு வழக்கில் தீர்வு காண, சராசரியாக, 324 நாட்கள் ஆகின்றன.

இதர சட்டப் பிரிவுகளில், தீர்வு காண, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இதனுடன் ஒப்பிடும் போது, திவால் சட்டம், மிக விரைவாக கடனை வசூலிக்க உதவுகிறது. இந்தாண்டு, மார்ச் நிலவரப்படி, திவால் சட்டத்தின் கீழ், 1,143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 32 சதவீத வழக்குகள், 270 நாட்களைக் கடந்தும், இன்னும் நிலுவையில் உள்ளன.

சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனுக்கு, 400 நாட்களுக்குப் பிறகும், தீர்வு எட்டப்படாத நிலை உள்ளது. தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், அதிக அளவில் வழக்குகளை கையாள்கிறது. இந்த சுமையைக் குறைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னுரிமை வழக்குகள் தொடர்பாக, தெளிவான வரையறையை உருவாக்குவது அவசியம்.

தகவல் திரட்டுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இரண்டாம் நிலை சொத்து சந்தையை ஏற்படுத்தினால், திவால் சட்டத்தின் கீழ், வழக்குகள் விரைந்து பைசலாகும்; வாராக் கடன் வசூலும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close