செய்திகள்

கொழும்புவில் மதக்கலவரம்…. இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்குதல்.!!!

கொழும்பு: இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று( மே 13)புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், அவரது தொழிற்சாலையில் இருந்த போது, மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டிவியில் ஆற்றிய உரையில் கூறியதாவது: அடையாளம் தெரியாத கும்பல் மதக்கலவரத்தில் ஈடுபட்டு நாட்டை அழித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு மாகாணத்தில் பல இடங்களில், அந்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு, பொது சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால், அடையாளம் தெரியாத அந்த கும்பல், தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். ஏப்., 21 ல் தேவாலயங்களில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணைக்கு அவர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்றார்.

போலீஸ் தலைவர் சந்தன விக்கிரமசிங்கே கூறுகையில், கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமையை கட்டுப்படுத்த முழு படையையும் பயன்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

கிறிஸ்தவ கும்பல் கலவரத்தில் ஈடுபடுவதால், மேற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வாகனங்கள் மற்றும் மசூதிகளை அந்த கும்பல் தாக்குதல் நடத்தின. ஹெட்டிபோலா பகுதியில் 3 கடைகளும், கொழும்பு அருகேயுள்ள மினுவங்கோடா என்ற நகரில் ஓட்டல் மற்றும் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் கூறினர். கலவரக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதனை பயன்படுத்தி சிலர் அரசியல் லாபம் அடைய சிலர் முயற்சி செய்வதாக போலீஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்புவில் 80 கி.மீ., தொலைவில்உள்ள சிலாவ் நகரில், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, கலவரம் வெடித்தது. கடையை அடித்து நொறுக்கியதுடன், அருகில் இருந்த மசூதி மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் கலவரம் மற்ற பகுதிகளுக்கும் பரவ துவங்கியது.

தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நெகோம்போ நகரிலும் கடந்த வாரம் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே மோதல் வெடித்தது. தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்க துவங்கிவிட்டதாகவும், முஸ்லிம் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகளை பதிவிட வேண்டாம் என இஸ்லாமிய அமைப்புகள் கேட்டு கொண்டுள்ளன.

கலவரத்தை தொடர்ந்து, வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைதளங்கள் முடக்கி வைக்கப்பட்டன. பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூ டியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை முடக்கி வைக்க வேண்டும் என இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வதந்திகளை மக்கள் நம்பாமல் இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் கேட்டு கொண்டுள்ளார். தேவாலயங்கள் மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து, இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை கைது செய்ய பாதுகாப்புபடையினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையன்று (ஏப்.,21) தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். இதனால், நாட்டில் பதற்றம் ஏற்பட்டது. இதன் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை(மே 12) அன்று தான் தேவாலயங்களில் வழிபாடு நடத்தப்பட்டது.

பள்ளிகளில் மாணவர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மாணவர்கள் வருகை குறைவாக உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.புத்த மதத்தினர் அதிகம் வசிக்கும் இலங்கையில், முஸ்லிம்கள் 10 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்கள் 76 சதவீதம் பேரும் வசிக்கின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close