செய்திகள்

அதிரடிப்படையினர் மீதான நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் பழனிச்சாமி கடும் கண்டனம்!

மகாராஷ்டிராவில் அதிரடிப் படையினர் மீது நக்சல்கள் நிகழ்த்தி உள்ள தாக்குதலுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் அதிரடிப் படையினரின் வாகனத்தின் மீது, நக்சல்கள் நடத்திய தாக்குதலில் சி 60 கமாண்டோ படையினர் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நக்சல்களின் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், உயிரிழந்த கமாண்டோ படை வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன், திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடும் கண்டனம் தெரிவித்தார். தனது ட்விட்டர் பக்கத்தில், இது போன்ற வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாக கூறியுள்ள ராம்நாத் கோவிந்த், தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக நலம் பெற பிரார்த்திப்பதாக பதிவிட்டுள்ளார்.

அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்வதாகவும் அவர்களது தியாகம் எப்போதும் மறையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள மோடி, இத்தகைய வன்முறை செயலுக்கு காரணமானவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close