விளையாட்டு

சென்னையில் ஃபானி புயல் இல்லை……. ஆனால் தோனி புயல் அடித்து டெல்லியை தும்சம் செய்தது !

சென்னை: டில்லி அணிக்கு எதிரான பிரிமியர் தொடர் லீக் போட்டியில் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்த கேப்டன் தோனியின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ‘சென்னை அணி, டில்லி அணியை எதிர்கொண்டது.சென்னை அணியில் துருவ் ஷோரே, மிட்சல் சான்ட்னர், முரளி விஜய் நீக்கப்பட்டு கேப்டன் தோனி, டுபிளசி, ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சென்னை அணிக்கு ஷேன் வாட்சன், டுபிளசி ஜோடி துவக்கம் தந்தது. , சென்னை அணி முதல் 3 ஓவரில், 3 ரன் மட்டுமே எடுத்து திணறியது. இந்த நெருக்கடியில் விளையாடிய வாட்சன் (0), சுசித் ‘வேகத்தில்’வெளியேறினார்.

சென்னை அணிக்கு முதல் 6 ஓவரில் 27 ரன் மட்டுமே கிடைத்தது.

ரெய்னா ஆக்ரோசம் : மோரிஸ் வீசிய 9வது ஓவரில் ரெய்னா, டுபிளசி தலா ஒரு பவுண்டரி அடித்தனர். அமித் மிஸ்ரா வீசிய 12வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ரெய்னா. மறுமுனையில் எழுச்சி கண்ட டுபிளசி, ரூதர்போர்டு, அக்சர் படேல் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது அக்சர் படேல் ‘சுழலில்’ டுபிளசி (39) சிக்கினார். சுசித் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்தை விளாசிய ரெய்னா, பிரிமியர் அரங்கில் தனது 37வது அரைசதத்தை பதிவு செய்தார். மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரெய்னா (53), அவுட்டானார்.

தோனி புயல் :அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல் வீசிய 16வது ஓவரின் கடைசி 2 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மோரிஸ் வீசிய 17வது ஓவரில் தோனி, ஜடேஜா தலா ஒரு பவுண்டரி அடித்தனர். பவுல்ட் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜடேஜா 25, அவுட்டானார். மோரிஸ் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தோனி, பவுல்ட் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்தார்.

சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா 4 ஏமாற்றினார். ஷிகர் தவான் 19 ரன் நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சகார் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். இம்ரான் தாகிர் ‘சுழலில்’ ரிஷாப் பண்ட் சிக்கினார். ஜடேஜா பந்தில் கோலின் இங்ராம் (1) சரணடைந்தார்.

தாகிர் வீசிய 11வது ஓவரில் அக்சர் படேல் (9), ரூதர்போர்டு (2) அவுட்டாகினர். ஜடேஜா வீசிய 12வது ஓவரில் கிறிஸ் மோரிஸ் (0), ஸ்ரேயாஸ் ஐயர் (44) ‘பெவிலியன்’ திரும்பினர். சுசித் (6) ‘ரன்-அவுட்’ ஆனார். தாகிர் பந்தில் அமித் மிஸ்ரா (8) ஆட்டமிழந்தார்.இதில் தோனி இரண்டு மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்துள்ளார்

டில்லி அணி 16.2 ஓவரில் 99 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் தாகிர் 4 விக்கெட் கைப்பற்றினார்.

80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

Tags
Show More
Back to top button
Close
Close