தமிழ் நாடு

20 வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – இந்தியாவின் மிக நீண்ட சுற்று வட்ட ரயில் போக்குவரத்து தமிழகத்தில் தொடங்கியது..!

சென்னை கடற்கரை ரயில் சந்திப்பில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக சுற்றுவட்டப் பாதையில் மின்சார ரயில் இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தற்போது தெற்கு ரயில்வே நிறைவேற்றியுள்ளது.சென்னை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக ஒரு மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், வழியாக மற்றொரு மின்சார ரயில் என 2 மின்சார ரயில்கள் சுற்றுவட்ட பாதையில் நேற்று முதல் இயக்கப்பட்டன. ரயில்வே துறையில், நாட்டிலேயே மிக நீண்ட தூரமுள்ள 194 கிமீ சுற்றுவட்டப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – அரக்கோணம் இடையே இருந்த குறுகிய பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி கடந்த 1994 முதல் 2000ம் ஆண்டு வரை நடந்தது. அதன்பின் ரயில் பாதையை மின்மயமாக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.ஆனால், அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள நிர்வாகம், தங்களது எல்லைக்கு அருகே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்கு தடை விதித்தது. ரயில்வே பாதை மின்மயமாக்கப்பட்டால், அதில் செல்லும் 25 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம், தங்களது தளத்தில் இருந்து விமானம் பறப்பதற்கும், இறங்குவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என காரணம் கூறியது.

மேலும், அரக்கோணம் – தக்கோலம் இடையே 6.5 கிமீ ரயில் பாதையை மின்மயமாக்கக்கூடாது எனவும் ஆட்சேபனை தெரிவித்தது. இதையடுத்து அங்கு மட்டும் மின்மயமாக்கல் பணி நிறுத்தப்பட்டது. இதனால் தக்கோலம் வரை மின் மயமாக்கப்பட்டு செங்கல்பட்டு வழியாக சென்னை – திருமால்பூர் இடையே மட்டும் மின்சார ரயில் இயக்கப்பட்டது.இதற்கிடையில், ஐஎன்எஸ் ராஜாளி நிர்வாகத்தின் ஆலோசனைபடி, கல்லாறு பகுதியில் இருந்து அரக்கோணம் வரை 5 கிமீ பாதைக்கு பதிலாக, கல்லாறில் இருந்து பொய்ப்பாக்கம், பருத்திபுத்தூர், மேல்பாக்கம் வழியாக அரக்கோணம் வரை 9.8 கிமீ தூரத்துக்கு மாற்றுப்பாதையை, ரயில்வே நிர்வாகம் அமைத்து, பணிகள் முடிவடைந்துள்ளன. இதையொட்டி, சுற்றுவட்டப்பாதை ரயில் சேவை தொடங்கப்பட்டது.

பயணிகளின் கருத்து:

இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க முன்னாள் தலைவர் சீத்தாராமன் கூறுகையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். சுற்றுவட்ட ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அது இப்போதுதான் நிறைவேறியது.மேலும் சென்னை – செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் – காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்துக்கு ரயில் பாதை அமைத்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக இயக்கப்பட்டுள்ள இந்த ரயில்கள் மூலம் வடசென்னை பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கட்டமான தொழிலாளர்கள், வியாபாரிகள், தனியார் கம்பெனி ஊழியர்கள் குறைந்த செலவில் சென்று வரலாம் என்றார்.

96 கி.மீ. 40 நிமிடம் மிச்சம்:

இந்த புதிய ரயில் பாதை மூலம் காவேரிபாக்கம், ஒச்சேரி, திருமால்பூர் உள்ளிட்ட சில கிராம மக்கள் ரயில் வசதியை பெறுவார்கள். செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் செல்ல சென்னை சென்ட்ரல் அல்லது கடற்கரை ரயில் நிலையம் செல்ல வேண்டும். இது சுமார் 106 கிமீ தூரம்.செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூருக்கு அரக்கோணம் வழியாக செல்ல 96 கிமீ தூரம் மட்டுமே. இதனால், பயண நேரம் 40 நிமிடம் குறையும். இதுபோல வண்டலூர், மறைமலைநகர், செங்கல்பட்டில் இருந்து ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர் செல்ல இதுவரை பஸ் பயணத்தையே நம்பி இருந்த மக்கள், இந்த புதிய ரயில் பாதை மூலம் பல சிரமங்களை தவிர்க்கலாம்.

Tags
Show More
Back to top button
Close
Close