செய்திகள்

ராகுல் மன்னிப்பை ஏற்க கோர்ட் மறுப்பு : மீண்டும் கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளில் குறிப்பிட்டிருந்த சில ஆவணங்கள் ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியது. அப்போது, இது குறித்து, காங்., தலைவர், ராகுல் கூறுகையில், தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக்கொள்ளும், பிரதமர் மோடி, ஒரு திருடன் என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது எனக்கூறியிருந்தார். 

கோர்ட் கூறாததை பொய்யாக மாற்றிக்கூறி, கோர்ட் அவமதிப்பு செய்துள்ளதாக, பா.ஜ., பெண் எம்.பி., மீனாட்சி லேகி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து பதில் அளிக்க ராகுலுக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்தரப்பு தவறுதலாக பயன்படுத்துகிறது. நீதிமன்றத்துக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை கூறியதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் பதில் அளித்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ராகுல் சார்பில் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வியும், மீனாட்சி லேகி சார்பில் முகுல் ரோகத்ஹியும் ஆஜரானார்கள்.

அப்போது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ராகுலின் மன்னிப்பை ஏற்க மறுத்ததுடன், மீண்டும் கிரிமினல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை ஏற்க மறுத்து விசாரணையை ஏப்.,30க்கு ஒத்தி வைத்தனர்.

Tags
Show More
Back to top button
Close
Close