செய்திகள்

பிரதமர் மோடி முயற்சியால் அபுதாபியில் அமையும் முதல் இந்துக் கோயில்!! 14 ஏக்கர் நிலத்தில் திருப்பணிகள் தொடங்கின: லட்சக்கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சி!

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அபுதாபி நகரில் அமையவுள்ள முதல் இந்து கோயிலுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. இதையடுத்து அங்குள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அபுதாபி நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் போசசன்வாசி ஸ்ரீ அக்சரபுருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்பின் (பிஏபிஎஸ்) பீடாதிபதி மகந்த் சுவாமி மகராஜ் கலந்துகொண்டு கோயில் அமைக்க அடிக்கல் நாட்டினார். போசசன்வாசி ஸ்ரீ அக்சரபுருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்புதான் இந்தக் கோயிலை  நிர்மாணிக்க உள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் கோயில் அமைப்பதற்கான இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டுசெங்கல் வைத்து யாகம், பூஜை, சடங்குகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் நவ்தீப் சுரி கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய அறிக்கையை வாசித்தார். இந்துக் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்த அரசுக்கு பிரதமர் மோடி தனது அறிக்கையில் பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும் அபுதாபியின் இளவரசர் ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானுக்கும் அவர் தனது பாராட்டுகளை அதில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும்போது உலகளவிலான மனித மதிப்புகளையும், ஆன்மீக மதிப்புகளையும் அடையாளப்படுத்தும் இடமாக கோயில் மாறியிருக்கும். மேலும் இது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான பாரம்பரியத்தை பகிர்ந்துகொண்டது போல் அமையும் என்றும் மோடி அதில் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 33 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். 2015-ல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி சென்றபோது கோயில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் அளித்தது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

அபுதாபி-துபாய் நெடுஞ்சாலையில் அபு மரைக்கா என்ற இடத்தில் 14 ஏக்கர் நிலப்பரப்பளவில் கோயில் அழகுற அமைகிறது. கோயிலில் கலாசார வளாகம், ஆர்ட் கேலரி, தியான மண்டபங்கள், நூலகம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவை அமையவுள்ளன.

இந்த கோயிலுக்கான தூண்கள், சிற்பங்களை இந்தியாவில் உள்ள சிற்பக் கலைஞர்கள் உருவாக்குகின்றனர். பின்னர் அவை துபாய் கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்படும்.

இதுகுறித்து துபாயிலுள்ள பாஜகவின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு செய்தித்தொடர்பாளர் சஞ்சீவ் புருஷோத்தமன் கூறும்போது, ‘‘ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக கடைப்பிடிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோயில் வழிபாட்டுக்கான இடம் மட்டுமல்ல. மனித மேம்பாடு, நல்லிணக்கத்தை சமுதாயத்தின் இடையே உருவாக்கும் இடமாக இது இருக்கும்” என்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close