செய்திகள்

இந்திரா காந்திக்கு காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பொன்னான வாய்ப்பு கிடைத்தும் தவறவிட்டுவிட்டார் ? பிரதமர் மோடி ஆதங்கம்!

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் ((Barmer)) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார். 1971ஆம் ஆண்டு போரின்போது, இந்தியாவிடம் சரணடைந்த 90 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்களை வைத்து, காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால், இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு, அரிய வாய்ப்பை தவற விட்டுவிட்டதாகவும் கூறினார்.

அதே இடத்தில் நாம் இருந்திருந்தால் தவற விட்டிருப்போமா?  அந்த வீரர்களை பாதுகாப்பாக வைத்திருந்திருப்போம். அதே சமயம் அந்த விவகாரத்தை பணயமாக வைத்து காஷ்மீர் பிரச்சினையும் அந்த இடத்திலேயே தீர்த்து வைத்திருப்போம் என்றார்.

மேலும், தனது கடுமையான எச்சரிக்கையை கண்டு பேரச்சத்தில் ஆழ்ந்ததன் காரணமாகவே, போர் விமானி அபிநந்தனை, பாகிஸ்தான் உடனடியாக விடுவித்ததாக மோடி குறிப்பிட்டார். தீவிரவாதமும், தேசியவாதமும் தற்போது ஒரு பிரச்சினையே இல்லை என காங்கிரஸ் குறிப்பிடுவதாக கூறிய மோடி, பாதுகாப்பு படைகளில் உள்ள இளைஞர்கள், தீவிரவாதிகளை எதிர்த்து, உயிர் தியாகம் செய்து, சவப்பெட்டிகளில், சடலமாக கொண்டுவருவதை பார்த்த பிறகும், எப்படி அதனை பிரச்சனையாக கருத முடியாமல் இருக்க முடியும் என்றும் வினவியிருக்கிறார்.

பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் இருக்கிறது என்றால், இந்தியா மட்டும் என்ன… தீபாவளிக்கு வெடிக்கவா அணுகுண்டுகளை வைத்திருக்கிறது.. நீங்கள் என்ன காரணத்துக்காக வைத்திருக்கிறீர்களோ அதே காரணத்துக்குத்தான் நாங்களும் வைத்துள்ளோம் என்றும் கூறினார். பிரதமர் இவ்வாறு கூறியதும் பொது மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Tags
Show More
Back to top button
Close
Close