2019 தேர்தல்இந்தியாசமூக ஊடகம்செய்திகள்

முத்ரா’ கடன் பெற்றவர்கள் கண்ணியமாக திருப்பி செலுத்துகின்றனர், வாராக்கடன்மிகவும் குறைவு: மத்திய நிதியமைச்சகம் பெருமிதம்!!

சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கான, ‘முத்ரா’ நிதியுதவி திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கை விட குறைவாகவே உள்ளதாகவும், கடன் பெற்றவர்கள் கண்ணியமாக கடனை திருப்பி செலுத்திவருவதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறு, சிறு நிறுவனங்கள் பிணையின்றி சுலபமாக கடன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் மோடி, 2015, ஏப்., 8ல், ‘பிரதம மந்திரி முத்ரா திட்டம்’ என்ற நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதில், வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை, ‘சிஷூ, கிஷோர், தருண்’ என, மூன்று பிரிவுகளின் கீழ், கடன் வழங்குகின்றன. இத்திட்டத்தில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் முதல், அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது.

பெண்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் மேம்பாட்டிற்கான முத்ரா திட்டத்தில், இந்தாண்டு, மார்ச், 22 நிலவரப்படி, 2.73 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடன் குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பல குறைகளை கூறியிருந்தார்.

 இந்நிலையில், மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின், பிரதம மந்திரி முத்ரா திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளதை விட, குறைவாகவே உள்ளது. வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய, ‘பேசல்’ விதியில் நிர்ணயிக்கப்பட்டதை விட, முத்ரா திட்டத்தில் வாராக் கடன், 5 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக உள்ளது.

வங்கிகள், ‘முத்ரா’ திட்டத்தின் கீழ், குறு, சிறு, நிறுவனங்களுக்கு பிணையின்றி, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றன. கடந்த, 2017 — 18ம் நிதியாண்டில், இத்திட்டத்தின் கீழ், 1.32 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இது, 2018- – 19ம் நிதியாண்டில், 1.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச், 22 வரை, இத்திட்டத்தில், 2.73 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு ஜனவரி இறுதி நிலவரப்படி, முத்ரா திட்டத்தில் வாராக்கடன், 11 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close