செய்திகள்தமிழ் நாடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த புதிய ஏரி உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்தது : வரும் அக்டோபரிலிருந்து சென்னைக்கு குடிநீர் வரும் !

தொடர்ந்து மக்கள் தொகை வளர்ந்து வரும் சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளுடன் சேர்த்து மேலும் ஒரு புதிய ஏரியை உருவாக்க கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதிய ஏரி அமைக்க திட்டமிட்டு பணியை தொடங்கிவைத்தார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தேர்வாய் கண்டிகை பெரிய ஏரியையும், அருகே உள்ள கண்ணங்கோட்டை ராஜன் ஏரியையும் இணைத்தும், கூடுதலாக நிலத்தை அதில் சேர்த்தும், 1,495.64 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.330 கோடி செலவில், ஆயிரம் மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் வகையில், புதிய நீர்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டது.

தற்போது வரை 75 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. தொடர்ந்து பணிகளை வரும் செப்டம்பரில் முடித்து அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவ மழை நீரை தேக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் முழுமையாக முடிந்த உடன் அங்கு நீரை சுத்திகரிக்கும் நிலையம், நீரேற்று நிலையம் போன்றவற்றை சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அமைத்து, சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய தொடங்கும். பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் நீரின் உபரி நீர்த்தேக்கமாக இந்த புதிய நீர்த்தேக்கம் திகழும். இதில் 1½ டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.

அக்டோபர் மாதத்தில் மழை பொய்த்து போனாலும் கூட, சென்னை மக்களுக்கு 1½ மாதங்களுக்கு நீர் வினியோகம் செய்வதற்கு இந்த நீர்த்தேக்கம் பயன்படும். சென்னை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திராவிலிருந்து பெறப்படும் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீரையும், பருவகாலங்களில் பொழியும் மழைநீரையும் கூடுதலாக தேக்கி வைக்க, இந்த நீர்த்தேக்கம் பயன்படும்.

சென்னை குடிநீர் தேவைக்காக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த வீராணம் ஏரி தண்ணீரை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் முதல் தேர்வாய் கண்டிகை- கண்ணங்கோட்டை ஏரியில் இருந்தும் எடுக்கப்படும் தண்ணீரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். இதுதவிர மேலும் 2 நீர்த்தேக்கங்களை அமைத்தால், சென்னை மாநகரை குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாநகரமாக மாற்ற முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close