2019 தேர்தல்அரசியல்இந்தியா

இழுபறி போட்டியாக மாறிய தூத்துக்குடி: தமிழிசை, கனிமொழிக்கிடையே கணிக்க முடியாத நிலையில் கள நிலவரம்!

இந்த மக்களவைத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் இழுத்துள்ள தொகுதியாக இருப்பது தூத்துக்குடி தொகுதியாகும். இங்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையுடன் தி.மு.க சீனியர் தலைவரான கனிமொழியும் போட்டியிடுவதால் ஒருவித பரபரப்புக்குள்ளாகி இருப்பதும் இந்த தொகுதி தான்.

கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் புகார் ஓன்று பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரை ஆடியோ பதிவு ஒன்றின் அடிப்படையில் தூத்துக்குடி எம்.எல்.ஏ கீதா ஜீவன் அளித்திருந்தார். அந்த பதிவு வாட்ஸ் அப்பிலும் பல சுற்றுகளாக பகிரப்பட்டது.

இந்த ஆடியோ பதிவு கீதா ஜீவனுக்கும் மதுரையை சேர்ந்த ஒருவருக்கும் இடையில் நடைபெற்ற பதிவாகும். இந்த பதிவில் தேவேந்திர குல வேளாளரின் 7 இனங்கள் ஒன்றாக இணைவதற்கு எதிரான போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யும்படி எம்.எல்.ஏ மதுரையை சேர்ந்த ஒருவரிடம் கேட்கிறார்.

பிற்படுத்தப்பட்ட பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த இந்த மதுரைக்காரர் தேவேந்திர குல வேளாளர் இனப்பிரிவுகளான குடும்பன் ,பன்னடை, கல்லாடி, கடையன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் மற்றும் பள்ளன் ஆகிய பிரிவுகள் ஒன்றாக இணைவதற்கு கடும் எதிர்ப்பை எம்.எல்.ஏ-விடம் தெரிவித்துள்ளார்.  

அப்போது அந்த மதுரைக்காரர் மேலும் கூறுகையில், பட்டியல் இனத்தவர்களான தேவேந்திர குல வேளாளர் இனப்பிரிவுகளான மேற்கண்ட 7 பிரிவுகளும் ஓன்று சேர்க்கப்பட்டு, அவர்கள் வெள்ளாளர் என அழைக்கப்படக் கூடாது என்றும், அந்த 7 பிரிவினரும் “தேவேந்திர குலத்தார்” என்று அழைக்கப்படலாம் எனவும் ஒரு தீர்வாக கூறியுள்ளார்.

ஏற்கனவே புதிய தமிழகம் கட்சி தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி மேற்கண்ட பட்டியல் இனத்தவர்களான தேவேந்திர குல வேளாளர் இனப்பிரிவுகளான மேற்கண்ட 7 பிரிவுகளை சேர்ந்தவர்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களை பட்டியல் இனப்பிரிவிலிருந்து மீட்டு, பிற்பட்டோர் இனத்தில் சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஒருவர் பட்டியல் பிரிவிலிருந்து தங்களை நீக்கி, பிற்பட்டோர் இனத்தில் சேக்கப்பட வேண்டும் என கேட்பது நாட்டில் இதுதான் முதல் முறை. எனவே அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரும் இந்த பின்னணியில்தான் இந்த எம் எல் ஏ – மதுரைக்காரர் இடையேயான உரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மதுரை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், கிருஷ்ணசாமியின் கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாகவும், தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை கவனிக்க தனி கமிட்டி அமைத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இந்த ஆடியோ உரையாடல் தி.மு.க-வின் மக்களவை தேர்தலுக்கான ஒரு அரசியல் திட்டம் என்றும் குறிப்பாக தூத்துக்குடி தொகுதிக்கான திட்டம் என்பதும் தெளிவாக தெரிந்துள்ளது. அதாவது 1.25 இலட்சம் வெள்ளாளர் பிள்ளைமாரின் வாக்குகளை வேட்டையாட தீட்டப்பட்ட திட்டம் இது.

இந்த தொகுதியில் போட்டிடும் கனிமொழி மறைந்த தி.மு.க தலைவரின் மகளாவார். தி.மு.க மகளிரணி தலைவியாக உள்ளார். இந்த பலத்துடன்  மோதும் இவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை அ.தி.மு.க, புதிய தமிழகம் மற்றும் பா.ம.க பின்னணயில் போட்டியில் உள்ளார்.     

தூத்துக்குடி மக்களவை தொகுதி ஏற்கனவே திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் இருந்தது. கடந்த 2009-ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பு திட்டப்படி திருநெல்வேலி, தூத்துக்குடியிலிருந்து சில பகுதிகள் எடுக்கப்பட்டு திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம்( தனி தொகுதி), கோவில்பட்டி மற்றும் விளாத்திக்குளம் அடங்கிய புதிய தூத்துக்குடி மக்களவை தொகுதி உருவாகியது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க இந்த தொகுதியில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதில் நான்கு தொகுதிகளை வென்றது. தி.மு.க தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளை வென்றது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு கட்சி மாறிய அனிதா ராதாகிருஷ்ணன் திருசெந்தூரில் வெற்றி பெற்றார். கடந்த 2009-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.ஜெயதுரை தி.மு.க சார்பில் தூத்துக்குடி தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார். சென்ற மக்களவை தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ஜயசிங் தியாகராஜா நாட்டார்ஜி ஜெயதுரையை 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் ஜெயதுரை சென்ற 2009 ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் சிந்தியா பாண்டியனை 75,000 வாக்குகளில் மட்டுமே வென்றார்.  

இந்த நிலையில் கருணாநிதி மகளாகிய கனிமொழி மாநிலத்தில் எந்த தொகுதியை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் தூத்துக்குடி தொகுதியை தேர்வு செய்ததேன்? உண்மையிலேயே கனிமொழி எந்தத் தொகுதியை விரும்பினாரோ அந்த தொகுதியை தி.மு.க வழங்கி இருக்கக்கூடும்.

கனிமொழியை பொறுத்தவரை ராஜ்யசபா எம்.பி பதவி விரைவில் முடிவடைகிறது. அவருக்கு மத்திய சென்னை தொகுதி பாதுகாப்பானது தான். ஆனால், தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை தொகுதியை விட்டால் வேறு தொகுதி பாதுகாப்பு இல்லை என்பதால் தி.மு.க வேட்பாளராகி இங்கு நிற்கிறார். தென் சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். கடந்த 2014 தேர்தலில் இவர் தி.மு.க வேட்பாளரை சுலபமாக வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் திமுக வென்றாலும் 3 ஆம் இடத்தில் இருந்து வாக்குகள் பெற்ற பா.ஜ.க வேட்பாளர் இல.கணேசன் தி.மு.க-வை விட 50,000 வாக்குகளே குறைவாக பெற்றிருந்தார். எனவே இந்த தேர்தலில் சுலபமான வெற்றி கிடைக்காது என்பதால் கனிமொழிக்கு இந்த தொகுதியும் பிடிபடவில்லை.   

அடுத்ததாக வட சென்னையை தேர்வு செய்யலாம் என்று பார்த்தால் அந்த தொகுதி ஏழை எளிய மக்கள், குறைந்த வருமானம் உடையோர்  வாழும் தொகுதி. தினகரன் போன்ற பணத்தை அள்ளி வீசி வெற்றி வாகை சூடத்தெரிந்தவர்கள் மட்டுமே துணிச்சலாக போட்டியிட முடியும். அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி தொடங்கிய அவர் கடந்த ஆர்.கே. நகர் இடைதேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இந்த தொகுதி வட சென்னை தொகுதியின் ஒரு பகுதியாகும். மறைந்த அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவின் தொகுதியாகும்.

எனவே இந்த தொகுதியும் பாதுகாப்பான தொகுதி இல்லை என்பதால் கனிமொழி வேறு ஒரு பாதுகாப்பான தொகுதியை தேர்ந்தெடுக்கும் அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் காங்கிரஸ் மத்தியில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றுவிட்டால் தனக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என்பதால் சரியான தொகுதியை தேர்வு செய்யும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.  

அதன்படி இரண்டு காரணங்களுக்காக அவர் தூத்துக்குடியை தேர்வு செய்தார். முதல் காரணம் கனிமொழியின் தாயார் இந்த தொகுதியின் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடார் இனத்தை சேர்ந்தவர். எனவே தனது தாய் பூமி எனக் கூறி அரசியல் செய்ய முடியும்.

முன்பு ஒருமுறை கருணாநிதி கல்யாணசுந்தரம் என்கிற பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளினார். கனிமொழி கருணாநிதியின் மகள் என்று அந்த பத்திரிக்கையாளர் எழுதிவிட்டார் என்ற காரணத்துக்காக அவரை சிறையில் தள்ளினார். அந்த சம்பவங்கள் எல்லாம் அன்றைக்கு தூத்துக்குடி பொது மக்களின் கவனத்துக்கு வந்தன. இந்த நிலையில் அவர் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தூத்துக்குடி தொகுதியில் உண்மையான போட்டி உண்மை நாடாருக்கும் போலி நாடாருக்கும் இடையிலான போட்டி என விமரிசிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாவது காரணம், ஸ்டெர்லை ஆலை விவகாரம், இந்த விவகாரத்தை வைத்து தி.மு.க-வினர் தாங்கள் வெற்றி பெற்றுவிடலாம் என கருதுகின்றனர். இந்த ஆலை சென்ற 1996-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது தான். 2004 – 2014 வக்கில் அப்போது இருந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் தி.மு.க செல்வாக்கோடு இருந்த போது தான் இந்த ஆலையின் விரிவாக்க திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு மே 29 அன்று இந்த விரிவாக்க திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். அதை தொடர்ந்து ஆலை மூடப்பட்டது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், தொழிற்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், அதை நம்பி வாழ்ந்த தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது வரும் தேர்தலில் எதிர் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தி.மு.க ஸ்டெர்லைட் போராட்டகாரர்களுக்கு ஆதரவாக நடந்துக் கொண்டாலும், அ.தி.மு.க அரசு துப்பாக்கி சூடு வன்முறை நடைபெற்ற தினத்திலிருந்து ஆலையை தொடர்ந்து மூடியே வைத்துள்ளது.  

இதிலிருந்து கனிமொழி மற்றும் தி.மு.க-வினர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே எந்த அளவுக்கு திட்டமிட்டு, முன் எச்சரிக்கையுடன் பணிகளை தொடங்கினர் என்பது தெரிந்துக் கொள்ளலாம். பா.ஜ.க மற்றும் அதன் மாநிலத் தலைவரை எதிர்கொண்டு ஒரு தேர்தல் அரசியலை எதிர்கொள்வது என்பது கனிமொழிக்கு இதுவே முதல்முறை.

தமிழிசையை பொறுத்தவரை அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கான முதல் பலமாக இருப்பது அந்த தொகுதியில் பெரும்பான்மையாகவுள்ள நாடார் இனத்தை சேர்ந்தவர் என்பது. (இந்த நாடார் சமூகத்தில் உள்ள பலர் கிறிஸ்தவ சமூகத்துக்கு மாறிவிட்டாலும் அவர்களும் தங்களை தொடர்ந்து நாடார் என்றே அழைத்துக் கொள்கின்றனர். இந்து நாடார்கள் மற்றும் கிறிஸ்தவ நாடார்களுக்குள் திருமண உறவுகளும் உண்டு. இவர்களை பொறுத்தவரை சாதி முதலில், மதம் பிறகுதான்.)   

தமிழிசையின் போட்டியால் கிறிஸ்தவ நாடார்களுக்கு எதிரான உருவமாக அவரை இந்து நாடார்கள் கருதுகிறார்கள். மோடி அரசாங்கத்தால் அமல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி வரி அமைப்பால் மகிழ்ந்த நாடார் வணிகர்கள் அனைவரும் அவருக்கு வாக்களிக்கக் கூடும்.

மேலும் ஏற்கனவே கீதா ஜீவன் பேசிய ஆடியோ பேச்சு மூலம் வெள்ளாளர் பிள்ளை சமூக வாக்குகளை அவர்கள் பிரிக்க முயலலாம். ஆனால் நரேந்திர மோடி அரசு பொது பட்டியலில் உள்ள பொருளாதார ரீதியாக பிற்பட்ட சமூகங்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வெள்ளாளர் பிள்ளை சமூகத்தை சேர்ந்த 1.25 லட்சம் வாக்குகளை பா.ஜ.க பெற வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், தமிழிசை , கனிமொழி ஆகிய இருவருக்குமே வெற்றி என்பது மிக சுலபமாக தெரியவில்லை. தமிழிசை மிகவும் காலதாமதமாகத்தான் தூத்துக்குடியை தேர்வு செய்தார். இது அவருடைய சுயவிருப்பமும் அல்ல. பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் தமிழிசை திருநெல்வேலியைத்தான் முதலில் தேர்வு செய்தனர். அடுத்து தூத்துக்குடியை தேர்வு செய்யும் முன்பாக புதிதாக தொடங்கப்பட்ட அ.ம.மு.க கட்சியின் செல்வாக்கு குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ள முடியவில்லை.

தேவர் இனத்தவர் விளாத்திக்குளம் பகுதியில் செல்வாக்கு பெற்றுள்ளனர். இந்த பகுதியில் நாடார் இனம் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் உள்ளனர். மேலும் விளாத்திக்குளம் பகுதியில் உள்ள அ.தி.மு.க-வின் நிலையான வாக்குகளை அ.ம.மு.க பிரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதே போல, கோவில்பட்டி பகுதியில் தேவர் மற்றும் நாயுடு சமுதாய மக்களுக்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. இந்த பகுதியின் வாக்குகள் ம.தி.மு.க தலைவர் வைகோ-வின் செல்வாக்கால் தி.மு.க வேட்பாளர் கனிமொழிக்கு கிடைக்கக்கூடும்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அ.தி.மு.க-வுக்கு முக்கியமான கட்சி பிரமுகர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். அவர் கட்சி பணிகள் செய்ய மறுத்த நிலையில் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதன் விளைவுகளும் தெரிய வரும். திருச்செந்தூர் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்குடைய அனிதா ராதாகிருஷ்ணனின் செல்வாக்கும் கனிமொழிக்கு கை கொடுக்க வாய்ப்புண்டு.

சுபாஷ் பண்ணை மற்றும் ஜான் பாண்டியன் ஆதரவு

மற்றொரு பக்கம் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் தம்பி சுபாஷ் பண்ணையார் இந்த மக்களவை தேர்தலில் அ.தி.மு.க-வை ஆதரிக்கிறார். மற்றொரு சமுதாய தலைவரான ஜான் பாண்டியன் தமிழிசைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க, பா.ம.க மற்றும் கூட்டணி கட்சி வாக்குகளும் தமிழிசைக்கு சாதகங்களாக உள்ளன.

மேலும் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை ஒழித்த பாலகாட் சம்பவம் , தூத்துக்குடி துறைமுக விரிவாக்கப் பணிகள், மிகப்பெரிய கப்பல்கள் கடற்கரைக்கே வந்து சரக்கு பெட்டகங்களை இறக்கும் வகையில் கடலோரப்பகுதிகள் ஆழப்படுத்தப்பட்டது போன்ற மோடி அரசின் சாதனைகளும் தமிழிசை வெற்றிக்கு சிறிய அளவில் கை கொடுக்கும்.

தமிழிசை, கனிமொழி 2 வேட்பாளர்களுமே வெற்றிக்கான அனுகூலங்கள் மற்றும் தடைகளை சமமாகக் கொண்டிருப்பதால் இந்த தொகுதியின் முடிவை அனைத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கனிமொழிக்காக இந்த தொகுதியை முன்கூட்டியே தேர்ந்து எடுத்துள்ளார்கள். ஆனால் தமிழிசைக்காக இந்த தொகுதி தேர்வு செய்யப்படவில்லை. இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஒருவரை ஒருவர் வெல்ல முடியும் என்பது தெரிகிறது. 

This article is translated version of Swarajya Magazine’s piece titled “Why Thoothukudi Lok Sabha Contest Between BJP’s Tamilisai And DMK’s Kanimozhi Could Go Down To The Wire”

Tags
Show More
Back to top button
Close
Close