ரஜினியின் ஆதரவு கண்டிப்பாக, அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு தான் இருக்கும். இதற்கு என்ன காரணமென்றால், ரஜினி, வெகுநாட்களாக கூறி வந்த, நதிநீர் இணைப்பு திட்டத்திற்கான வாக்குறுதியும், விவசாயிகள் பயன் பெற கூடிய திட்டங்களும், எங்களது கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்றன. இதை, ரஜினி் வெளிப்படையாக வரவேற்றுள்ளார். அதனால், ரஜினியின் ஆதரவு, எங்கள் கூட்டணிக்கு நிச்சயம் உண்டு. அவரது ரசிகர்கள், எங்கள் கூட்டணிக்கு தான் ஆதரவு அளிப்பர்; ஒட்டு போடுவார்கள் என அ.தி.மு.க., , தகவல் தொழில்நுட்ப அணி, , மாநில செயலர்  ஜி.ராமச்சந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணிக்கு, ரஜினி ஆதரவு அளித்துள்ளார். ‘இரட்டை இலைக்கு ஓட்டு போட்டுள்ளேன்’ என, அவரே கூறியுள்ளார்.தி.மு.க., ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட, 75.25 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி அளவை, 109.37 லட்சம் டன்னாக உயர்த்தியது, அ.தி.மு.க., அரசு.தி.மு.க., ஆட்சியில், 21.76 சதவீதமாக இருந்த பசுமை போர்வை பரப்பளவு, அ.தி.மு.க., ஆட்சியில், 23.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற பல சாதனைகளை, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செய்து வருகின்றனர்.

சமீபத்தில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சி கால ஒப்பிடுதல்களை, ‘இன்போக்ராபிக்ஸ்’ வாயிலாக, மிகச் சிறப்பாக, வெளியிட்டோம். இது, சமூக வலைதள மக்களிடம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும், மிகவும், எளிமையாக அணுகக் கூடிய நிலையில் இருக்கின்றனர்.

மக்களின் அமோக வரவேற்பு, அ.தி.மு.க.,விற்கு இருக்கிறது. எனவே, 40 லோக்சபா தொகுதி களிலும், 22 சட்டசபை தொகுதி களின் இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். அ.தி.மு.க., வுக்கு கூட்டணியே இல்லை எனக் கூறியவர்கள், இன்று, அ.தி.மு.க., வின் பலமான கூட்டணியை பார்த்து திணறுகின்றனர். இன்னும் ரஜினியின் ஆதரவும், எங்கள் கூட்டணிக்கு கிடைக்கும்போது, கூடுதல் பலத்தை தருவது நிச்சயம்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2257748

Share