அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர் சிகிச்சை காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதற்கிடையே விஜயகாந்த் சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தன், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பால் ஆகிய்யோரை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அதில் அவர் பேசியதாவது:

”பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, அன்புகொண்ட சகோதர சகோதரிகளே, என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்காகப் பிரார்த்தனை செய்துகொண்ட அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள். நமது சின்னம் முரசு. நாம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யுமாறு இரு கரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று” தெரிவித்துள்ளார் விஜயகாந்த். தொடர்ச்சியாக பேசமுடியாத நிலையில் உள்ள விஜயகாந்துக்காக இந்த வீடியோ பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. வீடியோவின்போது இடையில் பேச முடியாமல் விஜயகாந்த் சிரமப்படுவதாகவும், அவரின் குரல் கம்மியிருப்பதகாவும் கூறப்படுகிறது.

Share