அதிமுக, பாமக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொள்கிறார் விஜயகாந்த்.

தமிழகம், புதுச்சேரியில் வரும் 18 -ம் தேதி 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேமுதிக தலைவர் சிகிச்சை முடித்து வந்திருப்பதால் அவர் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தேமுதிக சார்பில் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ‘தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேட்பன் விஜயகாந்த் அவர்கள் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் திரு.அழகாபுரம் R.மோகன்ராஜ் அவர்களை ஆதரித்து முரசு சின்னத்திலும், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் திரு சாம்பால் அவர்களை ஆதரித்து மாம்பழம் சின்னத்திலும் நாளை (இன்று) மாலை 4 மணிக்கு சென்னை மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரசார பயணம் மேற்கொள்கிறார்’ என்று தெரிவித்துள்ளது

Share