புதுடில்லி: ”சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதில், மோடி அரசு சாதனை படைத்துள்ளது,” என, ‘நிடி ஆயோக்’ முன்னாள் தலைவர், அரவிந்த் பனகாரியா கூறினார்.

மத்திய அரசுக்கு, பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு தலைவராக 2017 வரை இருந்தவர், அரவிந்த் பனகாரியா. இவர், டில்லியில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நல திட்டங்களான, ஆயுஷ்மான் பாரத், கிராம மின்மயம் ஆகிய திட்டங்களை, மோடி அரசு, மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களால், மக்கள் பலனடைந்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால், ஏழைகளுக்கு மருத்துவ செலவு குறைந்துள்ளது. அத்துடன், ஊழல் ஒழிப்பிலும், அரசு அபாரமாக செயல்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்டம், வங்கி கணக்கில் மானியம் செலுத்தும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதிலும், அரசு வெற்றி அடைந்து உள்ளது. சமையல், ‘காஸ்’ சிலிண்டர் தட்டுப்பாடு நீக்கம், கிராமங்களில் நவீன சாலைகள் அமைப்பு ஆகிய வற்றிலும், அரசு, பெரும் சாதனை படைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Share