பொள்ளாச்சியில் நள்ளிரவில் பா.ஜனதா நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி சீனிவாசபுரம் நேதாஜி கார்டனை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் இந்த பகுதியின் பா.ஜனதா செயலாளராக உள்ளார்.

நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். வீட்டில் தூங்கியபோது நள்ளிரவு மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்தது.

சத்தம்கேட்டு எழுந்த சிவக்குமார் மோட்டார் சைக்கிள் கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். 

எனினும் மோட்டார் சைக்கிள் பாதி எரிந்து சாம்பலானது. விசாரணையில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து சிவக்குமார் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பா.ஜனதா நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த சம்பவம் தெரியவந்ததும் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share