மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்திருந்தார்.

நதிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டால் வறுமை ஒழியும் என்றும், வேலைவாய்ப்பு பெருகும் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரஜினிகாந்தின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் இடையேயும் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. ரஜினிகாந்த் பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கின்றாரா என்றெல்லாம் சில கட்சி தலைவர்களும், பத்திரிக்கைகளும் கிசு, கிசுத்தன. இந்நிலையில், ரஜினிகாந்தின் வரவேற்புக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தினதந்திபத்திரிக்கையின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் “சாமானிய மக்களின் தண்ணீர் பிரச்னையை ரஜினிகாந்த் பேசியிருப்பது நல்ல விஷயம். பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”  என்றார்.

மேலும், ரஜினிகாந்தின் பாராட்டை ஆதரவாக எடுத்துக்கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, “2013 மற்றும் 2014-ல் அவரை சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“அடுத்தமுறை ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்திக்கும் போது, அவருடன் அரசியல் குறித்து ஆலோசனைகள் பற்றி பேசுவேன்” என்றும் பிரதமர் மோடி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Share