2019 தேர்தல்செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என 63% பேர் விருப்பம் : ராகுல் பிரதமராக வேண்டும் என வெறும் 16% பேர் மட்டுமே விருப்பம்

2019 மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நெட்வொர்க் 18 குழுமத்தைச் சேர்ந்த பர்ஸ்ட்போஸ்ட், சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனமான ஐ.பி.எஸ்.ஓ.எஸ் உடன் இணைந்து ‘தேசிய நம்பிக்கை ஆய்வு’ என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி வரை ஒரு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 52.8 சதவீதம் பேர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரதமராக வேண்டும் என 26.9 சதவீதம் பேரும் அந்த ஆய்வில் தெரிவித்திருந்தனர் என்று தி இந்து செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில், 2-வது கட்ட தேசிய நம்பிக்கை ஆய்வு நடத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 31 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ஆந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. அதில், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என 63 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்தனர். இது முதல்கட்ட ஆய்வின்போது இருந்த ஆதரவைவிட 10 சதவீதம் அதிகம். அதேநேரம் ராகுல் பிரதமராக வேண்டும் என வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்தனர்.

இது முந்தைய ஆய்வைவிட சுமார் 10 சதவீதம் குறைவு ஆகும். இப்போதைய நிலவரப்படி, ராகுலைவிட மோடிக்கான ஆதரவு 4 மடங்கு அதிகமாக உள்ளது. கடந்த மாதம் காஷ்மீரில் நடந்த புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு நமது விமானப்படை பதிலடி கொடுத்தது. இதன் காரணமாக பிரதமர் மோடி மீதான மதிப்பு கணிசமாக அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இந்தியா மீதான மதிப்பு உயர்வு, நாட்டு நலன் கருதி மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவது, துணிச்சலாக முடிவு எடுக்கும் திறன் ஆகியவற்றில் மோடி சிறந்து விளங்குவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்காளர்கள் மத்தியில், ராகுல் காந்தி மீதான நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, நம் நாட்டின் பிரச்சினைகளை ராகுல் நன்கு புரிந்துகொண்டுள்ளதாக குறைவான வாக்காளர்களே கருதுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

உள்கட்டமைப்பு வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close