லயோலா முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் ஒரு அமைப்பு, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது. லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பதை மட்டுமே தங்கள் அடையாளமாக சொல்லிக் கொள்ளும் சிலர் தொடர்ந்து திமுகவுக்கு சாதகமான கருத்துக் கணிப்பு முடிவுகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றனர்.

இதனை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற இந்த அமைப்பு இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டின் சட்ட மன்றத் தேர்தலில் திமுக பெருவாரியான வாக்குகளைப் பெற்று, 127 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தது. ஆனால் திமுக கூட்டணி 100 இடங்களை கூட தொடவில்லை. தமிழக வரலாற்றில் எம்.ஜி.ருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறை ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

கடந்த 2017ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என மற்றொரு புளுகு மூட்டையை கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் திமுகவுக்கு அங்கு டெபாசிட் பறிபோனதோடு, 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது.இந்த நிறுவனம் மட்டுமல்லாமல், இன்னும் பல நிறுவனங்கள் தேசிய அளவிலும், கருத்துக் கணிப்புகளை நடத்தி, தங்களது கற்பனை குதிரைகளை தட்டி விடுகின்றன. தேர்தல் வரலாறு நெடுகிலும், எந்த ஒரு கருத்துக்கணிப்பும் இதுவரை துல்லியமாக இருந்தது இல்லை.

பொய்க்கால் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக, போலி கருத்துக்கணிப்பு நிறுவனங்களை நம்பி, தன்னைத் தானே மகிழ்ச்சிபடுத்திக் கொள்கிறது திமுக. இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை நடத்த, பின்னணியில் நடக்கும் பேரங்களும் அண்மைக்காலமாக அம்பலப்பட்டு வருகின்றன.

Share