இந்தியா

ராகுல் காந்தியின் வருவாய் 10 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்தது எப்படி? 2 முறை கேட்டும் மவுனம் சாதிப்பது ஏன்? பாஜக சரமாரி கேள்வி..!

டந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் ரூ.56 லட்சத்தில் இருந்து, ரூ.9 கோடியாக உயர்ந்துள்ளது தொடர்பாக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. அந்த வருவாய் அதிகரிப்புக்கான ஆதாரத்தை ராகுல் வெளியிட வேண்டும் என்றும்  அக்கட்சி கூறியுள்ளது.

2004, 2014 மக்களவைத் தேர்தல்களில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது அளித்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் பாஜக இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது.

இதுகுறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:

எம்.பி. யாக இருக்கும் ராகுல் காந்திக்கு, அதற்கான ஊதியத்தை தவிர்த்து வேறு எந்தவொரு வருவாய் ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும்போது, கடந்த 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டு காலத்தில் அவரது தனிநபர் வருவாய் ரூ.56 லட்சத்தில் இருந்து, ரூ.9 கோடியாக அதிகரித்துள்ளது. அது எவ்வாறு அதிகரித்தது? அந்த வருவாய் அதிகரிப்புக்கான ஆதாரம் என்ன என்று ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்.

ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் நிலத்தை மிகக் குறைவான விலைக்கு வாங்கி, பிறகு அதை மிக அதிகமான விலைக்கு விற்று வந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா, 4.69 ஏக்கரிலான மெஹ்ரெளலி பண்ணை வீட்டை ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டனர். அதன் மூலம் வாடகை வருவாயாக மாதம் ரூ.6.70 லட்சம் பெற்றனர். 

அதேவேளையில், ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு விசாரணை ஒன்று நடைபெற்று வந்தது. 

அந்த காலகட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேராவுக்கு இருந்த வர்த்தகத் தொடர்புகள் குறித்து விசாரித்து அல்லவா? 
அதேபோல், 2ஜி ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொண்டிருந்த யுனிடெக் நிறுவனத்திடம் இருந்தும் ராகுல் மற்றும் பிரியங்கா சொத்துகளை வாங்கியுள்ளனர். கடந்த 2011-12 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ராகுல் காந்தி குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

அசோஸியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் வழக்கில், ரூ.100 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்று சம்பித் பத்ரா கூறினார். முன்னதாக இதே விவகாரத்தை குறிப்பிட்டு, ராகுல் தனது வருவாய் அதிகரிப்புக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டுமென மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close