தமிழ் நாடு

அதிமுக ஆட்சியை கவிழ்க்கமுடியாத விரக்தி: அனைத்துப் போராட்டங்களையும் தூண்டிவிட்டது திமுகதான்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு.!

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களுக்கும் பின்புலமாக இருந்து செயல்பட்டது திமுகதான் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது: திமுக ஆட்சியில்தான் பாலங்கள் அதிக அளவில் கட்டப்பட்டதாக அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பெரம்பூர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

அமைந்தகரை அண்ணா வளைவு, திருவொற்றியூர் ரயில்வே மேம்பாலம், போரூர் சந்திப்பு மேம்பாலம், பல்லாவரம் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்ட ஏராளமான பாலங்கள் அதிமுக ஆட்சியில்தான் கட்டப்பட்டன.

ஸ்டாலின் எந்தக் கூட்டத்தில் பேசினாலும், நான் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வருகிறார். எம்.ஜி.ஆர்  தொடங்கிய அதிமுகவில் 1974-முதல் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியால் தற்போது முதல்வராக உள்ளேன்.

எனக்கு வாய்ப்புக் கிடைத்ததால் அந்தப் பதவியில்இருக்கிறேன். ஸ்டாலினுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தால் முதல்வர் பதவிக்கு வருவதற்கு எனக்கு எந்த வருத்தமும்இல்லை.

இந்த ஆட்சி 10 நாள்கள் நீடிக்குமா, ஒரு மாதம் தாக்குப்  பிடிக்குமா என அவர் பேசி வந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது அதிமுக அரசு.
நான் முதல்வராகப் பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன.

இதுவரை எந்த முதல்வரும் சந்திக்காத போராட்டங்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து அதிலும் வெற்றி கண்டிருக்கிறது அதிமுக அரசு. ஆனால், இதுபோன்ற போராட்டங்கள் அனைத்துக்கும் பின்புலமாக இருந்து செயல்பட்டது திமுகதான் என்றார். 

கொடநாடு தோட்டக் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் எனது பெயரைக் கெடுக்க வேண்டும் என திமுக திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது.

குற்றவாளிகளைப் பிணையில் எடுப்பதற்கு உதவும் போதே இந்த சந்தேகம் எழுந்தது.தற்போது வெளியான விடியோ மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இதிலுள்ள சதித்திட்டங்கள் குறித்து சிறப்புவிசாரணைக்கு விரைவில் உத்தரவிடப்படும்  என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

Tags
Show More
Back to top button
Close
Close