சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு பலவீனம் தான் என்று முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுதர்சன நாச்சியப்பன் கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரசுக்கு பலவீனம் தான். என் வளர்ச்சியை தடுத்தவர் ப.சிதம்பரம்.சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது.

தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம். ப. சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்”, என சுதர்சன நாச்சியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதால்,  ப.சிதம்பரம் சிவகங்கையில் போட்டியிடாமல் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை களமிறக்கினார். எதிர்பார்த்தபடியே அவர் தோல்வி அடைந்தார். தற்போது ப.சிதம்பரம் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். இதனால் தனது மகனை மீண்டும் நிறுத்தப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் ஒதுக்கிய நிலையில், சுதர்சன நாச்சியப்பன் கடும் அதிருப்தியில் உள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால், அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு மக்களவைத் தொகுதியில் சீட் தரவே கூடாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் தலைமையிடம் போர்க்கொடி தூக்கினார் என்று தி இந்து செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

சிவகங்கை காங்கிரஸின் கோஷ்டி மோதல் :

சிவகங்கை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே உள்ள கோஷ்டி மோதல் குறித்து தி இந்து செய்தி வெளியிடுகயில், “ப.சிதம்பரம் த.மா.கா-வுக்குச் சென்றபோது சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் சார்பில் நின்று சிவகங்கை தொகுதியில் வெற்றிபெற்றார். மீண்டும் ப.சிதம்பரம் காங்கிரஸில் சேர்ந்ததால், சுதர்சன நாச்சியப்பனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டது. அவர் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார்.

சுதர்சன நாச்சியப்பனின் பதவிக் காலம் முடிந்த நிலையில் அவருக்கு மாநிலத் தலைவர் பதவி தரப்போவதாக கூறப்பட்டது. அதற்கு ப.சிதம்பரம் முட்டுக்கட்டை போட்டதாகச் சொல்லப்பட்டது.  இந்நிலையில், தற்போது ப.சிதம்பரம் மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பதால், தனக்கு சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு தரும்படி சுதர்சன நாச்சியப்பன் டெல்லி தலைமையிடம் கேட்டு வந்தார்.

கடந்த தேர்தலில் போட்டியிட்டபோது கார்த்தி சிதம்பரம் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை. இதனால் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்தார். கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையில் உள்ளதை தலைமைக்கு சுட்டிக்காட்டிய சுதர்சன நாச்சியப்பன் சீட் கேட்டு கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார்.

ஒருபக்கம் ப.சிதம்பரமும் மகனுக்காக தலைமையிடம் அழுத்தம் கொடுத்தார். இதனால்  யாருக்கு சிவகங்கை தொகுதி என்பதில் இழுபறி நீடித்து வந்தது.

சிவகங்கை தொகுதிக்கான போட்டியில் நானும் கார்த்தி சிதம்பரமும் மட்டுமே இருக்கிறோம்.  அத்தொகுதியை எனக்கு அளிக்கவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் தலைமைக்கு என்னுடைய விசுவாசம் தெரியும்.  முடிவு ராகுல் கையில் என சமீபத்திய பேட்டியில் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். மேலும், நான் எப்போதும் கட்சி சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பவன். கட்சிக்கு எதிராகப் புரட்சி செய்து எப்போதும் நடக்கும் நபரல்ல. அதற்கான மரியாதை எனக்கு கட்சிக்குள் இருக்கிறது.  நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று பேட்டியில் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனால்  சுதர்சன நாச்சியப்பன் கடும் அதிருப்தி அடைந்தார்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share