சென்னையில் மீண்டும் ஓசி பிரியாணி கொடுக்காத ஆத்திரத்தில் ஊழியர் மீது தி.மு.க நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேளச்சேரி, காந்தி நகரைச் சேர்ந்தவர், அப்துல்லா (28). அதே பகுதியில், பிரியாணி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (23), தமிழ்செல்வன்(25), ஆகியோர், இவரது கடைக்கு வந்துள்ளனர். குடி போதையில் இருந்த இருவரும், ‘ஓசி’ பிரியாணி கேட்டுள்ளனர். அப்துல்லா பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த மேகநாதன், ”நான், தி.மு.க., நிர்வாகி என்று தெரிந்தே பணம் கேட்கிறாயா’ என, மிரட்டி உள்ளார். பின், இருவரும் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில், மூக்கில் பலத்த காயமடைந்த அப்துல்லா, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேளச்சேரி போலீசார், மேகநாதன், தமிழ்செல்வன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர்.

முன்னதாக சென்னையில் ஓசி பிரியாணி கேட்டு அடித்த சூடு அடங்குவதற்குள் பெரம்பலூரில் பெண்களை பியூட்டி பார்லரில் தி.மு.க நிர்வாகி தாக்கியது, திருவண்ணாமலையில் செல்போன் கடையை அடித்து நொறுக்கியது, கருணாநிதி மறைவு சமயத்தில் தள்ளுவண்டிக்காரரை தாக்கி துவம்சம் செய்தது, வேலூரில் காருக்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநரை பெண்டு நிமித்தியது என தி.மு.க ரவுடிகளின் அராஜகம் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share