மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி அவர் டிக்கெட் கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுமலதா களம் இறங்கி உள்ளார். சுயேட்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்து உள்ளது. மாண்டியா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் சுமலதா- நிகில் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

சுமலதாவுக்கு காங்கிரசாரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சச்சி தானந்தா, மாண்டியா மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சசிகுமார், இளைஞர் காங்கிரசை சேர்ந்த அரவிந்தகுமார், விஜய் குமார், மஞ்சுநாத், சந்துரு, கிருஷ்ணகவுடா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியினர் யாரும் சுமலதாவுடன் இணைந்து எந்த மேடையிலும் பங்கேற்க கூடாது என்றும், ஆதரவு தெரிவிக்க கூடாது என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டூராவ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பா.ஜனதா ஆதரவு குறித்து சுமலதா கூறுகையில், மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எனக்கு பா.ஜனதா ஆதரவு அளித்துள்ளது. இந்த ஆதரவு எனக்கு யானை பலம் கிடைத்தது போல உள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன். பாராளுமன்ற தேர்தலில் எனது போராட்டத்தை தொடர்வேன். எனது போராட்டத்துக்கு மாண்டியா மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் உள்ளது. இவர்களுடன் மறைந்த எனது கணவர் அம்பரீஷின் ரசிகர்கள் ஆதரவும் உள்ளது’ என்று பேசியுள்ளார்.

Share