ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்பட்ட பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் கூட பாகிஸ்தான் வரமுடியாது என்று விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார்.

அமெரிக்க தயாரிப்பான சினூக் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்படும் நிகழ்ச்சி சண்டிகரில் நடைபெற்றது.

சினூக் ஹெலிகாப்டர்கள் பன்முகப் பயன்பாடுகளுக்கு நவீன, கனரக ஹெலிகாப்டர்கள் ஆகும். போர் நடவடிக்கைகளில் உதவுவதோடு, மிக உயரமான இடங்களுக்கும் வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு செல்ல உதவும்.

இவை தேசத்தின் சொத்து என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறினார். இந்தியாவின் தேவைக்கு ஏற்ற மேம்பாடுகளுடன் சினூக் ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பி.எஸ்.தனோவா, ரஃபேல் போர் விமானங்கள் விமானப் படையில் இணைக்கப்பட்ட பின்னர் தாக்குதல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், அவை மிகச்சிறந்த போர் விமானங்களாக திகழும் என்றும் குறிப்பிட்டார்.

Share