திண்டிவனம் மக்களவைப் பொதுத் தொகுதியாக இருந்தது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விழுப்புரம் தனித் தொகுதியாகியிருக்கிறது. நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து வன்னியர்களுக்கும், அதே அளவில் தாழ்த்தப்பட்டோர் உள்ளங்களிலும் , அனைத்து வாக்காளர்களின் உள்ளங்களிலும் நம்பிக்கை நாயனாக வசித்த எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியார் தனிப்பட்ட முறையில் தன் பலத்தை பலமுறை நிரூபித்த தொகுதி இது.

திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்ரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத்தொகுதி இது. சர்வதேச நகரமான ஆரோவில் இந்தத் தொகுதியைச் சேர்ந்தது. திருவக்கரை கிராமத்தில் காணப்படும் கல்மரங்கள் புகழ்பெற்றவை. பட்டையில்லாத தாவர பேரினத்தைச் சேர்ந்தவை இவை.

பொருளாதாரத்தின் திசை: உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டை, திண்டிவனம் அருகே ஒரு தொழிற்பேட்டை போன்றவற்றைத் தவிர குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இல்லை. தொழில் தொடங்க வருபவர்களில் பலர், புதுச்சேரி அரசு வழங்கும் சலுகைகளுக்காக அங்கு சென்றுவிடுகிறார்கள்.

இதனால், இப்பகுதியில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக, இப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவின் எந்த நகரத்துக்குச் சென்றாலும் அங்கு விழுப்புரம்காரர் நிச்சயம் இருப்பார் என்று சொல்லும் அளவுக்குப் புலப்பெயர்வு அதிகரித்திருக்கிறது. விவசாயக் கூலித் தொழில் செய்பவர்கள் அதிகம்.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: மிகவும் பின்தங்கிய பகுதி இது. குடிசைகள் நிறைந்த மாவட்டம் என்று விழுப்புரம் மாவட்டத்துக்கு ஒரு பெயர் உண்டு.

என்றாலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திலேயே பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தை அதிகம் பயன்படுத்திக் கொண்ட மாவட்டம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. கழிப்பிட வசதியை கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு மேலாக பெற்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

நீண்டகாலக் கோரிக்கைகள்: வேலை வாய்ப்புகளைத் தரும் தொழிற்பேட்டைகள், உயர் கல்வி வளர்ச்சிக்கான மேம்பாட்டுப் பணிகள், சவுக்கு – காகிதத் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. பாலாறு, செய்யாறு இரண்டையும் இணைத்து 36 ஏரிகளுக்கு நீர் வரும் பாதையைச் சரிசெய்யும் வகையில் திட்டமிடப்பட்ட நந்தன் கால்வாய் திட்டம், பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் மூலம் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

இதற்கிடையில் கால்வாய்களின் புனரமைப்புக்காகத் தமிழக அரசு ரூ.13.45 கோடி ஒதுக்கியிருக்கிறது. எதுவுமே இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கம். என்றாலும் அதிமுக-பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக வேட்பாளர் வடிவேல் இராவணன் வெற்றி பெற்றால் கூட்டணியின் கனவு திட்டமான கோதாவரி-பாலாறு-தென்பெண்ணை-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேறினால் விழுப்புரம் மக்களவை தொகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயம் மறுமலர்ச்சி அடையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஒரு சுவாரஸ்யம்: 1952-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவர், புகழ்பெற்ற பத்திரிகையாளரான ராம்நாத் கோயங்கா. அந்தத் தேர்தலில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி வேட்பாளர் திருக்குறள் வீ.முனுசாமி வெற்றி பெற்றார்.

1926-லேயே சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் ராம்நாத் கோயங்கா. அப்பதவியில் இருந்தபோது அரசின் தவறுகளை விமர்சனம் செய்ய அவர் தயங்கியதில்லை!

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வன்னியர், பட்டியலின சமூகத்தினர் ஏறக்குறைய சம அளவில் வசித்துவருகின்றனர்.

முதலியார், உடையார், ரெட்டியார், நாயுடு சமுதாயத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதிமுக, திமுக கட்சிகளின் நிலையான வாக்கு வங்கியும், பாமக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் வாக்குகள் சேரும் விகிதத்தைப் பொறுத்தும் வெற்றி வாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: திண்டிவனம் மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, உழைப்பாளர் கட்சியைச் சேர்ந்த ஜெயராமன், முனுசாமி, சுயேச்சையாக போட்டியிட்ட சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதன் பிறகு, தொடர்ந்து ஏழு முறை காங்கிரஸ் இந்தத் தொகுதியைக் கைப்பற்றியது. 1967, 1996 தேர்தல்களில் திமுக வென்றது. 1998, 1999-ல் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரனும், 2004-ல் பாமகவைச் சேர்ந்த தன்ராஜும் வெற்றி பெற்றனர். 2009-ல் அதிமுகவைச் சேர்ந்த ஆனந்தன் வெற்றி பெற்றார். 2014-ல் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,27,874

ஆண்கள் 7,14,211

பெண்கள் 7,13,480

மக்கள்தொகை எப்படி?

மொத்தம் 34,58,873

ஆண்கள் 17,40,819

பெண்கள் 17,18,054

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள் 91.79%

முஸ்லிம்கள் 3.87%

கிறிஸ்தவர்கள் 4.04%

பிற சமயத்தவர் 0.20%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 71.88%

ஆண்கள் 80.55%

பெண்கள் 63.15%

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

Share