சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைத்து விசாரணை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலை தாக்கல் செய்ய சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த 2004 முதல் 2007 வரை பதவி வகித்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர், கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதில் அரசுக்கு 1 கோடியே 78 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2013 ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஜனவரி 30 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மீண்டும் புதிதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராகி இருந்தனர். தொடர்ந்து பல நாட்கள் இந்த வழக்கு நடைபெற்று கொண்டு இருந்தது.

தற்போதைய நிலையில் குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்யச் கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் தனது உத்தரவில் சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளின் விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சிறையில் அடைத்து வழக்கு விசாரணையைத் தொடரலாம் என உத்தரவில் தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தேர்தல் நெருங்கும் நிலையில், மாறன் சகோதரர்கள் மீதான இந்த வழக்கின் உத்தரவு, தி.மு.க தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share