சிறப்பு கட்டுரைகள்

சர்வதேச உலக சிட்டுக்குருவி தினம் இன்று.. மனித இனத்தை காக்கும் அபூர்வ பறவை இனத்தை அழியாமல் காப்போம்.!

சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல் படி என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது என்கிறது இந்த கட்டுரை.

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையை பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் சுயநலத்துக்காக மிருகங்களையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம்.

ஒரு சிட்டுக் குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி, அதனால் தனது வாழ்க்கையையே பறவைகளுக்காக அர்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார்.

சீன நாட்டில் பயிர்கள் அழிய சிட்டுக் குருவிகளும் ஒரு காரணம் என கோடிக்கணக்கில் அதனை அழிக்க 1958-ம் ஆண்டு மாவோ உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோடிக்கணக்கான சிட்டுக் குருவிகள் கொடூரமாக  கொல்லப்பட்டன. இதனால், அடுத்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று பார்த்தால், அதற்கு மாறாக வெட்டுக்கிளிகளின் இனம் பெருகி விளைச்சல் பாதியாக குறைந்தது.

இதனால், அங்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக 1.5 கோடி சீனர்கள் பலியாகினர் என சீன அரசு தெரிவித்தது. ஆனால், தி டாம்ப்ஸ்டோன் புத்தகத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று இறந்ததாகவும், பசியின் கொடுமையால், மக்கள் நரமாமிசம் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த புத்தகம் சீன அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

சிட்டுக் குருவி தானே என சாதாரணமாக எண்ணாமல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில், செல்போன் சிக்னல்களால் அந்த இனம் அழிந்து வருவதை 2.0 என ரஜினி, அக்‌ஷய்குமாரை வைத்து படமாக்கியிருந்தார் ஷங்கர்.

இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐ.நா, 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது.

டெல்லி அரசு கடந்த 2012-ம் ஆண்டு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அங்கீகரித்தது.

சிட்டுக்குருவிக்காக நம்மால் பெரிதாக ஏதும் செய்ய முடியாவிட்டாலும், இந்தக் கோடை காலத்தில் வீட்டிற்கு வெளியிலோ அல்லது மாடியிலோ, சிறிது தண்ணீர் மற்றும் தானியங்கள் வைத்தால் போதும்.

சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல் படி என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது.

நகரங்களில், சிட்டுக் குருவிகளின் கீச் கீச் ஓசையுடன் தங்களின் காலை பொழுதை மனிதர்கள் தொடங்கிய காலம் ஒன்று இருந்தது. கேட்க கேட்க சலிக்காத, ஓசை சிட்டுக்குருவியினுடையது. சுறுசுறுப்பாக இயங்கிகொண்டே இருக்கும் சிட்டுக்குருவிகள் யவருக்கும் புத்துணர்ச்சியை தரும்.

சிட்டுக் குருவிக்கும் தமிழ் திரைப் பாடல்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. கட்டுப்பாடுகள் இல்லாமல் தன் போக்கில் வாழும் சிட்டுக்குருவிகளை போல் வாழ ஆசைப்படாத மனிதர்களும் உண்டோ…

கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சுற்றித்திரிந்தாலும் வீட்டின் மூலைகள், உத்திரம், வாயிற்கதவு, தோட்டங்கள் என ஆங்காங்கு கூடு கட்டி மனிதர்களுடன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழ்ந்தவைகள்தாம் சிட்டுக்குருவிகள்.

நகரமயமாக்கல், வாகனங்கள், செல்போன்கோபுரங்களின் பெருக்கம் போன்றவற்றால் தற்போது சிட்டுக்குருவிகள் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளன. நகரங்களில் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. சிறு சிறு பூச்சிகள், தாணியங்கள் போன்ற தனக்கு தேவையான இரை கிடைக்காமல், நகரங்களை விட்டு வெளியேறி எங்கோ கண்காணாத இடங்களை நோக்கி அவை இடம் பெயர்ந்து போயின.

தற்போது கிராமங்களில் மட்டும், அதுவும் குறைந்த அளவே காணப்படும் உயிரினமாக சிட்டுக்குருவிகள் சுருங்கியுள்ளன. அழிவின் விளிப்பில் உள்ள சிட்டுக் குருவிகளை காப்பது என்பது நம் முன் இருக்கும் மிகப்பெரிய கடமை.

சிறிய வீடாக இருந்தாலும் தோட்டம் அமைக்க வேண்டும் வீட்டு மொட்டை மாடியில் அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, தானியங்களை தூவுவது, மண் பானையில் வைக்கோல் நிரப்பு வீடுகளின் முற்றத்தில் வைப்பது போன்றவை மூலம் சிட்டுக்குருவிகளை மீண்டும் நகரம் நோக்கி நகர வைக்கலாம்.

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டாலே அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களை நாம் காப்பாற்றி விடலாம் .

Tags
Show More
Back to top button
Close
Close