இந்தியா

காங்கிரஸ் என்னும் படகை பிரியங்கா மூழ்காமல் கரை சேர்ப்பாரா.?

நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி மீது காங்கிரசார் நம்பிக்கை வைத்துள்ளனர். வீழ்ச்சியடைந்த கட்சியை கரை சேர்த்து விடுவார் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிரியங்கா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

இந்த கேள்வி இன்று நேற்றல்ல, அவர் என்றைக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதோ அன்று முதலே எதிரொலிக்கத் துவங்கிவிட்டன.

80 இடங்களை கொண்ட உத்தரபிரதேசத்தில் எந்தக் கட்சி வெற்றிக்கனியை பறிக்கிறதோ அந்த கட்சிதான் மத்தியில் ஆட்சியில் அமரும் என்ற எதிர்பார்ப்பு காலகாலமாக நிலவி வருகிறது.

ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த இடங்கள் வெறும் 2 மட்டும்தான். கட்சியின் அன்றைய தலைவராக இருந்த சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் மட்டுமே முறையே ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இதுவரை தாய்க்கும், சகோதரனுக்கும் மட்டுமே பிரசாரம் செய்தவர், இப்போது உபியில் அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகவும் பிரசாரம் செய்ய உள்ளார்.

முதல் கட்டமாக இப்போது பிரயாக் ராஜ் ஆக மாறியுள்ள கலாசார பெருமைமிக்க அலகாபாத் நகரில் இருந்து வாரணாசிக்கு 100 கி.மீ. தொலைவுக்கு கங்கை நதியில் படகில் 3 நாள் பயணம் செய்து கங்கைக்கரை மக்களின் கவனத்தை முதலில் கவர வேண்டும் அடுத்து அவர்களின் ஓட்டுகளை அள்ள வேண்டும்.

இதுதான் பிரியங்காவின் திட்டமாக உள்ளது. இந்த படகு கரை சேருமா அல்லது நீரில் மூழ்குமா என்று தேர்தல் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags
Show More
Back to top button
Close
Close