மக்களவைத் தேர்தல் தொடர்பாக சமூக வலைதள நிறுவன அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தினார். சமூக வலைதளங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக அவர் வாட்ஸ்அப், டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் விவாதித்தார்.

மக்களவை மற்றும் சில மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதுதொடர்பான தகவல்களைத் தரும்படியும், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை தாமாக நீக்குவது தொடர்பாக சமூக வலைத்தளங்களின் இந்திய நிர்வாகிகளிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமூக வலைத்தளங்களில் செயல்படும் அரசியல் கட்சிக‌ள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

தேர்தல் பரப்புரை நேரம் நிறைவடைந்தும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்புரை செய்யும் கட்சி மற்றும் கட்சியினர் தொடர்பான தகவல்கள் கேட்கப்பட்டதாகவும் முழு அளவிலான ஒத்துழைப்பு வழங்க சமூக வலைதள நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Share