செய்திகள்

மேற்கு வங்கத்தில் நான்கு முனை போட்டி எதிரொலி : பா.ஜ.க-வுக்கு சாதகமான அலை வீசுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து!! மம்தா உட்பட எதிர்கட்சிகள் அப்செட்

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய பா.ஜ.க அரசை வௌியேற்ற, 21 எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினார். இதில், அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சிகள், மத்திய பா.ஜ.க அரசைக் கடுமையாகச் சாடி வந்தாலும் கூட மம்தாவின் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மாபெரும் கூட்டணியைத் தொடங்கி வைத்த மம்தா, ‘அந்த கூட்டணி தன்னுடைய தலைமையில் இருக்க வேண்டும். காங்கிரசின் ராகுல் தலைமையில் இருக்கக் கூடாது’ என்று முடிவெடுத்ததாக, அம்மாநில காங்கிரசார் கூறினர். இந்நிலையில், மம்தாவுடன் கூட்டணி அமையாமல், காங்கிரஸ் அதன் எதிர் முகாமான கம்யூனிஸ்ட்களுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை  நடத்தியது. ஆனால் இந்தக் கூட்டணிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஒரு  வாரத்துக்கும் மேல் இரு எதிரெதிர்க் கட்சிகளும் கூட்டணிப் பேச்சை நடத்தின. கொள்கை அளவில் எதிரெதிர் முகாம் என்றாலும், கூட்டணிக்கு இரு தரப்பும்  ஒப்புக் கொண்டனர். ஆனால், தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையைக் கைவிடுவதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களிலும் வாக்குப் பதிவு நடக்கிறது. கூட்டணி பலமாக அமையாததால், மேற்கு வங்க அரசியலில் கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ.க என  அம்மாநிலத்தில் 4 முனை போட்டி  அமையவுள்ளது. 

அதற்கேற்றாற்போல், தனித்துப் போட்டியிட முடிவெடுத்து 42 தொகுதிகளுக்கும்  வேட்பாளர்களை மம்தா அறிவித்துவிட்டார். மம்தா எவ்வளவோ  முயற்சி செய்தும் கூட்டணி அமைவதில், எதிரெதிர் துருவங்களாக இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒத்துவரவில்லை. ஏற்கனவே பா.ஜ.க-வை எளிதாக வீழ்த்த கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டன.  இப்போது அந்த திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இது, மாநிலத்தில் பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள்  தெரிவிக்கின்றனர். இதனால் மம்தா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எரிச்சல் அடைந்துள்ளன.

Tags
Show More
Back to top button
Close
Close