செய்திகள்

39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப் பேரவை தொகுதிகள் : தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) 10 மணிக்கு தொடங்கியது.

வரும் 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய  கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 27-இல் மேற்கொள்ளப்பட உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியும், உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வேட்புமனு தாக்கல் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களுக்குச் சென்று வேட்புமனுக்களை அலுவலக வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும்.

வேட்புமனு தாக்கல் செய்ய வரும் பிரமுகருடன், நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.  மொத்தம் 5 பேர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறைக்குள் செல்லலாம். இதே போல், தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படும்.  விடுமுறை காரணமாக சனி, ஞாயிற்றுக்கிழமை  (மார்ச் 23, 24)  வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.  

வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படும் 26-ஆவது படிவத்தில் கூடுதல் தகவல்களை அளிக்க வேண்டும். அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தனது 5 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது ஓராண்டாக இருந்தது. தற்போது, 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலோ, ஏதாவது வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு இருந்தாலோ, அதையும் அவர் சுட்டிக்காட்ட வேண்டும். 

அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் தினத்துக்கு முன்பாக மூன்று முறை பிரபல செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்களில், தன் மீதான வழக்கு விவரங்கள் பற்றிய விளம்பரங்களை வேட்பாளர் அளிக்க வேண்டும். மக்களவை, பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும் என்றார்.

மதுரையில் வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு: 

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா காரணமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவை வேறு தினத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.  
இந்தக் கோரிக்கை தொடர்பாக, மாவட்டத் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான நடராஜனிடம் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. 

இதைத் தொடர்ந்து, ஆட்சியர் நடராஜன் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விரிவான அறிக்கையில், வாக்குப் பதிவுக்கான தேதியை மாற்றுவதற்குப் பதிலாக, வாக்குப் பதிவு நேரத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைத்தார்.  
இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவுக்கான நேரத்தை மட்டும் அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தை மாலை 6 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்கு நிறைவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே,  மதுரை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் மட்டும் இரண்டு மணி நேரம் கூடுதலாக வாக்களிக்கலாம் என்றார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.    

Tags
Show More
Back to top button
Close
Close