பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இதையடுத்து, இருநாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக இந்தியா கருதுகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு அரபிக் கடல் பகுதியிலும் இந்தியாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் அணி வகுத்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் கடற்பரைப்பை ஒட்டிய, வடக்கு அரபிக் கடல் பகுதியில், இந்திய கடற்படையின், போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன. TROPEX-19 என்ற தலைப்பில், முப்படைகளும் இணைந்து மேற்கொள்ளும் போர் ஒத்திகையுடன் கூடிய தயார் நிலை மற்றும் செயல்பாட்டு பயிற்சி நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்கிரமாதித்தியா உள்ளிட்ட இந்திய கப்பற்படையின் 60 போர்க்கப்பல்கள், இந்திய கடலோர காவல்படையின் 12 போர்க்கப்பல்கள், டோர்னியர் உள்ளிட்ட 60 போர் விமானங்கள், வடக்கு அரபிக்கடல் பகுதியில், நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

இவை மட்டுமின்றி, அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களான, ஐ.என்.எஸ் அரிஹந்த், ஐ.என்.எஸ் சக்ரா ஆகியவையும், எதிரிகளின் நடமாட்டத்தை நீருக்குள் மூழ்கியிருந்தவாறு தொடர்ந்து கண்காணித்து வருவதாக, இந்திய கடற்படை கூறியிருக்கிறது. இதனால் பேரச்சத்திற்கு ஆளான பாகிஸ்தான், அரபிக்கடல் பகுதியில் பொதுவான கடற்பரப்பில் நிலைநிறுத்தியிருந்த தனது கப்பல்களை உடனடியாக வாபஸ் பெற்றதோடு, மாக்ரன் கடற்கரையோரம் கொண்டுசென்று நிறுத்திவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share