2019 தேர்தல்செய்திகள்

கூட்டணி தர்மத்தை பா.ஜ.க-விடம் இருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும் : அகிலேஷ் யாதவ் பொளேர்

சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் நீங்கள் கூட்டணி அமைக்காததேன் எனவும், காங்கிரஸ் குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பின் வரும் பதில்களை அளித்தார்.   

கூட்டணிக் கட்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதை, பா.ஜ.க-விடம் இருந்து காங்கிரஸ் கற்றுக் கொள்ள வேண்டும். ஆட்சி அமைக்க, கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தேவை என்பதை, பா.ஜ.க, உணர்ந்துள்ளது. பல பிரச்னைகள் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளை பா.ஜ.க, விட்டுக் கொடுக்காது.

கூட்டணிக் கட்சிகள் எவ்வளவு நிர்ப்பந்தம் கொடுத்தாலும், அவற்றுடன் நட்புடன் உள்ளது. ஆனால், காங்கிரஸ் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அதனால் தான், கூட்டணி அமைக்கப்படவில்லை.

பா.ஜ.க,வைப் பொறுத்தவரை, கூட்டணி கட்சிகளுடன் சமரசமாக நடக்கிறது. பீஹாரில் கடந்த லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளில் வென்ற போதும், இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்ற, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன், 50 : 50 சதவீத தொகுதி களில் போட்டியிடலாம் என, சமரசம் செய்துள்ளது.

ஆனால், இதுபோல, கூட்டணி கட்சிகளுடன் விட்டுக் கொடுத்து நடந்து, கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது. இதற்கும் பதில், சரியான கூட்டணியை காங்கிரஸ் அமைத்து கொள்ளவில்லை என்பது தான்.

மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மியை போட்டியிட வைத்து, ஆதரவு அளித்திருக்க வேண்டும். எந்த சமரசத்துக்கும், காங்கிரஸ் தயாராக இல்லை. அதனால் நல்ல கூட்டணியை இழந்துள்ளது.

கூட்டணி அமைப்பது, அதை தக்க வைப்பதில், காங்கிரசை விட, பா.ஜ.க,வே சிறந்த கட்சி. சிவசேனா போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அப்னா தளம் போன்ற சிறிய கட்சிகளையும், பா.ஜ.க,விட்டுக் கொடுக்கவில்லை.

பா.ஜ.க,வை வெற்றி கொள்ள வேண்டும் என்ற பொது நோக்கத்துடன், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைத்துள்ளது பா.ஜ.க,வை வெல்ல வேண்டும் என காங்கிரஸ் நினைத்திருந்தால், எங்களுடன் சேர்ந்து வலு சேர்த்திருக்க வேண்டும். இருந்தாலும், எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த, இடைத்தேர்தல்களில் இதை நிரூபித்துள்ளோம்.

லோக்சபா தேர்தலில், பா.ஜ.க,வுக்கு எதிராக, மெகா கூட்டணி அமைக்கும் முயற்சி நடந்து வந்தது. அப்போது, கூட்டணி அமைப்பது குறித்து, பகுஜன் சமாஜுடன் பேசினோம். ஆனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் பெற்ற வெற்றியை காங்கிரஸ் கொண்டாடி கொண்டிருந்தது. அந்தக் கொண்டாட்டத்தில், கூட்டணி அமைப்பது குறித்து அந்தக் கட்சி கவலைப்படவில்லை.

இதையும் மீறி, மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைக்க, எங்கள் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.,வின் ஆதரவு தந்தோம். அமைச்சர் பதவியை தருவதாகக் கூறினர்; ஏமாற்றி விட்டனர். அமைச்சர் பதவி தந்தால், சமாஜ்வாதி கட்சி, மத்திய பிரதேசத்தில் வளர்ந்து விடும் என்று பயந்தனர். ஆனால் பா.ஜ.க-வாக இருந்தால்  அவ்வாறு செய்திருக்காது. கூட்டணி குறித்த தர்மங்களை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அகிலேஷின் தந்தையும், சமாஜ்வாதி நிறுவனருமான, முலாயம் சிங் யாதவ், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர்; அவர் மீண்டும் பிரதமராக வாழ்த்துக்கள்’  என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இன்று அவரது மகனும் பா.ஜ.க-வை வாயார புகழ்ந்துள்ளார்.

Based on Inputs from Dinamalar

Tags
Show More
Back to top button
Close
Close