செய்திகள்

அ.தி.மு.க – பா.ஜ.க – பா.ம.க – தே.மு.தி.க-வுடன் த.மா.கா-வும் இணைந்து மாபெரும் கூட்டணியானது

மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் த.மா.கா-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாட்டில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 2014-ல் தமாகாவைத் தொடங்கினார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் தே.மு.தி.க, மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து த.மா.கா போட்டியிட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இணைய ஜி.கே.வாசன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேச்சுநடத்தி வந்தார். ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தர முடியும். அதிலும் வாசன் போட்டியிட வேண்டும் என அ.தி.மு.க திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்டத் தலைவர்களுடன் வாசன் நேற்று ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் வாசன் போட்டியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீடுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சந்தித்துப் பேசினர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஸ் ஆகியோர் வாசனுடன் தொலைபேசியில் பேசினர்.

இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. த.மா.கா-வுக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவது என்று இறுதி செய்யப்பட்டு அ.தி.மு.க – த.மா.கா இடையே இன்று உடன்பாடு கையெழுத்தானது. இதில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கும் அதிமுகவுக்கு த.மா.கா ஆதரவளிக்கும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close