இந்தியா

சபரிமலையில் பக்தர்கள் அறிவுரையை ஏற்று திரும்பி சென்ற 2 இளம்பெண்கள்.. கோவிலில் சுமூக சூழ்நிலை.!

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் தரிசனத்திற்கு செல்லும் நிலை உருவாகி உள்ளது. என்றாலும் பெரும்பாலான பெண்கள் ஐதீகங்களை அனுசரித்தே செல்ல விரும்புகின்றனர்.

பக்தர்களின் மனம் கோணாமலும், புண்படாமலும் இருக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்கள் யாரும் சபரிமலைக்கு வரவில்லை. குறிப்பாக கேரளப் பெண்கள் ஒருவர் கூட வரவில்லை.

இந்த நிலையில் 50 வயதுக்கு உட்பட்ட ஓரிரு பெண்கள் கடந்த 2 நாட்களாக சபரிமலை வந்தனர் என்றும், ஆனால் ஐயப்ப பக்தர்கள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. சபரிமலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பங்குனி உத்திர திருவிழாவுக்கு நடை திறந்த பிறகு சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2 ஆந்திர இளம்பெண்களை ஏற்கனவே ஐயப்ப பக்தர்கள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் குழுவில் 50 வயதுக்கு உட்பட்ட ஒரு இளம்பெண்ணும் இடம் பெற்றிருந்தார்.

அந்த குழுவினர் மரக்கூட்டம் பகுதியில் சென்றபோது ஐயப்ப பக்தர்கள் அந்த இளம்பெண்ணை அடையாளம் கண்டு கொண்டனர். உடனே அவர்கள் சபரிமலையின் ஐதீகத்தை அந்த பெண்ணுக்கு எடுத்துக்கூறி சபரிமலையில் இருந்து திரும்பி செல்லுமாறு அறிவுரை கூறினார்கள். அந்த பெண்ணும் அதை ஏற்று திரும்பிச் சென்றார்.

சபரிமலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நிலக்கல், பம்பை, மரக்கூட்டம் போன்ற இடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பத்தனம்திட்டா ரெயில் நிலையம், பஸ் நிலையம் பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close